- Home
- Sports
- Fifa World Cup
- FIFA : கடைசி நேர கோலால் தப்பிய கனடா... பராகுவேயை பந்தாடிய அமெரிக்கா - கால்பந்து உலகக்கோப்பை ரிசல்ட் இதோ
FIFA : கடைசி நேர கோலால் தப்பிய கனடா... பராகுவேயை பந்தாடிய அமெரிக்கா - கால்பந்து உலகக்கோப்பை ரிசல்ட் இதோ
FIFA World Cup : உலகக் கோப்பை குரூப் பி போட்டியில், கனடா அணி போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது. அதேபோல் பராகுவேவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
FIFA World Cup Matches
FIFA உலகக் கோப்பை குரூப் பி-யின் முதல் போட்டியில், சொந்த மண்ணில் விளையாடிய கனடா அணி, போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்து தப்பித்தது. ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய கைல் லாரின் தான் கனடாவுக்காக கோல் அடித்து அணியைக் காப்பாற்றினார். இதற்கு முன்னதாக, 21-வது நிமிடத்தில் ஜோவோ லூக்கிச் போஸ்னியாவுக்காக கோல் அடித்திருந்தார்.
ஆட்டம் தொடங்கியது முதலே போஸ்னியா அதிரடியாக விளையாடியது. கனடா 54% பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் போஸ்னியாவுக்கு கிடைத்த ஒரே ஒரு கார்னர் கிக்கை அவர்கள் கோலாக மாற்றினர். சீட் கொலாசினாக் தலையால் முட்டி கோல் போஸ்ட்டுக்கு அனுப்பிய பந்தை, ஜோவோ லூக்கிச் தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ளினார்.
டிராவில் முடிந்த போட்டி
இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டின. 50-வது நிமிடத்திற்குப் பிறகு கனடாவுக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும், அதை கோலாக்க முடியவில்லை. இந்த நிலையில், 76-வது நிமிடத்தில் டானி ஒலுவசேயிக்கு பதிலாக மாற்று வீரராக கைல் லாரின் உள்ளே வந்தார். களமிறங்கிய இரண்டு நிமிடங்களிலேயே கோல் அடித்து, கனடாவுக்கு ஒரு நிம்மதியான டிராவைப் பெற்றுத் தந்தார்.
இந்த முறை உலகக் கோப்பைக்கு போஸ்னியா வந்ததே, இத்தாலி ரசிகர்களைக் கண்ணீரில் தள்ளிவிட்டுத்தான். யூரோப்பியன் ப்ளே-ஆஃப் போட்டியின் பெனால்டி ஷூட்-அவுட்டில், பலம் வாய்ந்த இத்தாலியை வீழ்த்தி போஸ்னியா அதிர்ச்சி கொடுத்தது. சரியாக 12 வருட இடைவெளிக்குப் பிறகுதான் போஸ்னியா இந்த உலக கால்பந்து திருவிழாவுக்குத் திரும்பி வந்திருக்கிறது. இது வெறும் கம்பேக் இல்லை. 2014 உலகக் கோப்பையில் ஈரானுக்கு எதிராகப் பெற்ற வெற்றிதான், தொடரின் வரலாற்றிலேயே போஸ்னியாவின் சிறந்த செயல்பாடாக உள்ளது.
கனடா அணி இதற்கு முன்பு 1986-லும் 2022-லும் உலகக் கோப்பையில் விளையாடியுள்ளது. இந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் சேர்த்து மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியும், ஒரு போட்டியில் கூட அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. ஆனாலும், கடந்த உலகக் கோப்பையில் குரூப் சுற்றில் பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் கனடாவின் ஆட்டம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
அமெரிக்கா vs பராகுவே
FIFA உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் டி-யின் முதல் போட்டியில், தொடரை நடத்தும் அமெரிக்கா, பராகுவே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா இந்த வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவுக்காக, ஃபோலரின் பலோகன் இரண்டு கோல்கள் அடித்தார். ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்த நிலையில், ஜியோவானி ரெய்னா நான்காவது கோலை அடித்து அமெரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளிலேயே அதிக கோல்கள் அடிக்கப்பட்டது இந்த ஆட்டத்தில்தான்.
போட்டி தொடங்கிய 7-வது நிமிடத்திலேயே அமெரிக்காவின் புலிசிச், பராகுவேயின் கோல் பாக்ஸிற்குள் பந்தைக் கொண்டு சென்றார். இது பராகுவே வீரர் டேமியன் போபடில்லாவின் ஓன் கோலில் முடிந்தது. முதல் பாதி முடிவதற்குள், அமெரிக்கா 3-0 என்ற தெளிவான முன்னிலையுடன் களத்தை விட்டு வெளியேறியது. மூன்று கோல்கள் பின்தங்கியிருந்தாலும், பராகுவே அணி இரண்டாவது பாதியில் ஓரளவு தாக்குதல் ஆட்டம் ஆடியது. இதன் விளைவாக, 73-வது நிமிடத்தில் மௌரிசியோ ஒரு கோல் அடித்தார். பராகுவே கோல்கீப்பர் தனது பகுதியில் இருந்து அடித்த பந்தை, மௌரிசியோ கோலாக மாற்றினார்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அர்ஜென்டினா, பிரேசில் போன்ற பெரிய அணிகளை வீழ்த்திய நம்பிக்கையுடன் பராகுவே தனது முதல் போட்டியில் களமிறங்கியது. ஆனால், பயிற்சியாளர் மௌரிசியோ போச்செட்டினோவின் வழிகாட்டுதலில், அமெரிக்கா தெளிவான திட்டங்களுடன் விளையாடியது. 7-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்த பிறகும், அவர்கள் தற்காப்பு ஆட்டத்தில் இறங்காமல், முதல் பாதி முழுவதும் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். இரண்டாவது பாதியிலும் தாக்குதலைத் தொடர்ந்ததால் தான் நான்காவது கோலும் சாத்தியமானது. விங்ஸ் வழியாக நடத்திய வேகமான தாக்குதல்கள், குரூப் டி-யில் அமெரிக்காவுக்கு மதிப்புமிக்க மூன்று புள்ளிகளைப் பெற்றுத் தந்துள்ளது. அமெரிக்கா தனது அடுத்த போட்டிகளில், ஜூன் 20 அன்று ஆஸ்திரேலியாவுடனும், ஜூன் 26 அன்று துருக்கியுடனும் மோதவுள்ளது.

