- Home
- Sports
- Fifa World Cup
- FIFA-வில் இன்று! நெதர்லாந்துக்கு தண்ணிகாட்டிய ஜப்பான்... ஈக்வடாரை வீழ்த்தி ஐவரி கோஸ்ட் வரலாற்று வெற்றி
FIFA-வில் இன்று! நெதர்லாந்துக்கு தண்ணிகாட்டிய ஜப்பான்... ஈக்வடாரை வீழ்த்தி ஐவரி கோஸ்ட் வரலாற்று வெற்றி
FIFA World cup 2026 : கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ஜப்பான் நெதர்லாந்து இடையேயான போட்டி டிராவில் முடிந்தது, மற்றொரு போட்டியில் ஐவரி கோஸ்ட் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

FIFA World Cup Result
ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் F சுற்றில், பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை ஜப்பான் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்துள்ளது. கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்தன. நெதர்லாந்து கேப்டன் விர்ஜில் வான் டைக் மற்றும் கிரிசென்சியோ சம்மர்வில் கோல் அடிக்க, ஜப்பானின் ஹீரோக்களாக கெய்ட்டோ நகாமுரா மற்றும் டாய்ச்சி கமடா மாறினர். பந்து பெரும்பாலும் ரொனால்ட் கூமனின் நெதர்லாந்து அணியிடமே இருந்தாலும், கவுன்ட்டர் அட்டாக்குகள் மூலமும், தங்களது அசாத்தியமான போராட்ட குணத்தாலும் ஜப்பான் இந்த ஆட்டத்தை டிரா செய்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஜப்பான் ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் நெதர்லாந்து மெதுவாக ஆட்டத்திற்குள் வந்தது. ஆனால், முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில், நெதர்லாந்து முதல் கோலை அடித்தது. ரயான் கிராவன்பெர்ச் கொடுத்த ஒரு அருமையான கிராஸை, லிவர்பூல் வீரரான கேப்டன் விர்ஜில் வான் டைக் தலையால் முட்டி கோலாக மாற்றினார் (1-0). ஆனால், நெதர்லாந்தின் இந்த கொண்டாட்டம் 7 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
57-வது நிமிடத்தில், டகேஃபுசா குபோ கொடுத்த பாஸை வாங்கிய கெய்ட்டோ நகாமுரா, பாக்ஸிற்கு வெளியே இருந்து அடித்த ஒரு ஷாட், நெதர்லாந்து கோல்கீப்பர் பார்ட் வெர்ப்ருகனைத் தாண்டி புகுந்தது. ஜப்பான் ஆட்டத்தை சமன் செய்தது (1-1). போட்டி மீண்டும் சூடுபிடிக்க, நெதர்லாந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. 64-வது நிமிடத்தில் அவர்கள் மீண்டும் முன்னிலை பெற்றனர். கிரிசென்சியோ சம்மர்வில் அடித்த ஷாட், கோல் வலையின் மூலையில் தஞ்சம் புகுந்தது (2-1). இந்த கோலுக்கும் கிராவன்பெர்ச்ச்தான் வழிவகுத்தார்.
ஜப்பானின் மிரட்டலான கம்பேக்
ஒரு கோல் பின்தங்கியதும், ஜப்பான் பயிற்சியாளர் ஹஜிமே மொரியாசு, மாற்று வீரர்களை களமிறக்கி வியூகங்களை மாற்றினார். அவரது உழைப்புக்கு பலன் கிடைத்தது. ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்த நிலையில், 89-வது நிமிடத்தில் கோகி ஒகாவா கொடுத்த பாஸை பெற்ற டாய்ச்சி கமடா, நிதானமாக கோல் அடித்து ஜப்பானுக்கு நம்பமுடியாத ஒரு சமனைப் பெற்றுத் தந்தார் (2-2).
கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டும், வேறு கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. நெதர்லாந்து முன்னிலையில் இருந்தாலும், சரியான நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்களால் ஜப்பான் ஒரு முக்கியமான புள்ளியைப் பெற்றது. இதனால், குரூப் F-ல் இனிவரும் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
ஈக்வடாரை வீழ்த்திய ஐவரி கோஸ்ட்
FIFA உலகக் கோப்பை குரூப் E பிரிவில், லத்தீன் அமெரிக்க அணியான ஈக்வடாரை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஐவரி கோஸ்ட் அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிலடெல்பியாவில் உள்ள லிங்கன் ஃபைனான்சியல் ஃபீல்ட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த விறுவிறுப்பான போட்டியில், 90வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் அமாத் தியாலோ அடித்த கோல், ஆப்பிரிக்க அணிக்கு இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்தத் தோல்வியின் மூலம், ஈக்வடார் அணியின் தொடர்ச்சியான 19 போட்டிகள் கொண்ட தோல்வியறியா பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
போட்டியின் முதல் பாதியில் ஈக்வடார் அணி களத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், இரண்டாவது பாதியில் ஐவரி கோஸ்ட் அணி தனது ஆட்ட யுக்திகளை மாற்றி, போட்டியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆட்டத்தின் முதல் அரை மணி நேரத்தில் ஈக்வடார் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், துரதிர்ஷ்டம் அவர்களின் முயற்சிகளுக்குத் தடையாக இருந்தது. ஈக்வடார் வீரர்களான ஜான் யெபோவா மற்றும் ஆலன் மிண்டா அடித்த இரண்டு அற்புதமான ஷாட்கள், ஐவரி கோஸ்ட் கோல் போஸ்ட்டின் கிராஸ் பாரில் பட்டுத் திரும்பியது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்திற்குள் வலுவாகத் திரும்பிய ஐவரி கோஸ்ட் அணிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு நழுவிப் போனது. எலி வாஹி அடித்த ஒரு ஷாட், ஈக்வடார் கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. போட்டி டிராவில் முடியும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 90வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோல் பதிவானது. வலது விங்கில் இருந்து வில்ஃபிரட் சிங்கோ கொடுத்த ஒரு அழகான பாஸை, மாற்று வீரராகக் களமிறங்கிய அமாத் தியாலோ பெற்றார். பாக்ஸிற்குள் இருந்து இடது காலால் அவர் அடித்த துல்லியமான ஷாட், ஈக்வடார் வலையில் தஞ்சமடைந்தது.
உலகக் கோப்பை வரலாற்றில், ஐவரி கோஸ்ட் ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைத் தோற்கடிப்பது இதுவே முதல் முறையாகும். 2014-க்குப் பிறகு உலகக் கோப்பைக்குத் திரும்பியுள்ள அவர்கள், இந்த வெற்றியின் மூலம் தங்கள் வருகையை மறக்க முடியாததாக மாற்றியுள்ளனர். ஈக்வடாரின் சூப்பர் ஸ்டார் கோன்சாலோ பிளாட்டாவின் கடுமையான கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்திய ஐவரி கோஸ்ட் கோல்கீப்பர் யாஹியா ஃபோஃபானாவின் செயல் இந்த வெற்றியின் முக்கியப் பங்கு வகித்தது.
