- Home
- Sports
- Fifa World Cup
- FIFa உலகக்கோப்பையில் இன்று... கடைசி நேர கோலால் தப்பிய உருகுவே... சேம் சைடு கோல் அடித்து வெற்றியை தவறவிட்ட எகிப்து..!
FIFa உலகக்கோப்பையில் இன்று... கடைசி நேர கோலால் தப்பிய உருகுவே... சேம் சைடு கோல் அடித்து வெற்றியை தவறவிட்ட எகிப்து..!
FIFA World Cup 2026 : கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பெல்ஜியம் - எகிப்து மற்றும் உருகுவே - சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் வென்றது யார் என்பதை பார்க்கலாம்.

FIFA World Cup 2026
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் குரூப் ஜி பிரிவில் நடந்த முதல் போட்டியில், பெல்ஜியமும் எகிப்தும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன. இரு அணிகளும் சிறப்பாக விளையாடிய இந்த ஆட்டத்தில், தொடக்கத்திலேயே எகிப்து அணி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில், சூப்பர் ஸ்டார் முகமது சலா கொடுத்த ஒரு அருமையான பாஸை, இமாம் அஷூர் கோலாக மாற்றினார். அவரது பவர்ஃபுல் ஷாட் கோல் வலையைத் தொட்டது. முதல் பாதி முழுவதும், எகிப்து அணி கவுன்ட்டர் அட்டாக்குகள் மூலம் பெல்ஜியம் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. முதல் பாதி முடியும் வரை பெல்ஜியத்தால் ஒரு ஷாட் கூட கோலை நோக்கி அடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு எகிப்து அவர்களை அழுத்தத்தில் வைத்திருந்தது.
ஆனால், இரண்டாம் பாதியில் பெல்ஜியம் அணி சில தந்திரமான மாற்றங்களுடன் களமிறங்கியது. ஸ்ட்ரைக்கர் ரொமேலு லுகாகுவை களமிறக்கியது, அவர்களின் தாக்குதலுக்கு மேலும் வலு சேர்த்தது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் பெல்ஜியம் சமன் செய்தது. ஆனால், அந்த கோல் ஒரு Own Goal-ஆக வந்தது. எகிப்து வீரர் முகமது ஹானியின் தவறால் இந்த கோல் பதிவானது. பெல்ஜியம் வீரர் தாமஸ் மியூனியர், லுகாகுவை நோக்கி பந்தை கிராஸ் செய்தார். அந்த பந்து எகிப்து வீரர் யாசர் இப்ராஹிம் மீது பட்டு திசைமாறியது. அதைத் தடுக்க முயன்ற மற்றொரு வீரரான முகமது ஹானியின் காலில் பட்டு, பந்து அவர்களது சொந்த கோல் வலைக்குள் சென்றது.
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில், இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெற நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. பெல்ஜியம் வீரர் பிராண்டன் மெஷெலெ அடித்த ஒரு அருமையான ஹெட்டரை, எகிப்து கோல்கீப்பர் முஸ்தபா ஷோபெய்ர் அபாரமாகத் தடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே லுகாகுவுக்கு கிடைத்த ஒரு கோல்டன் சான்ஸை, அவர் கோல் போஸ்ட்டுக்கு மேலே அடித்து வீணாக்கினார். முடிவில், குரூப் ஜி-யின் இந்த விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்துகொண்டு களத்தை விட்டு வெளியேறின.
உருகுவே vs சவுதி அரேபியா
FIFA உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில், சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. உருகுவே அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து தோல்வியிலிருந்து தப்பியது. இந்த டிரா மூலம், குரூப் H பிரிவில் உள்ள ஸ்பெயின், கேப் வெர்டே, உருகுவே மற்றும் சவுதி அரேபியா ஆகிய நான்கு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. மியாமியில் நடந்த இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே உருகுவே அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 5வது நிமிடத்தில், மதியாஸ் வீனா கொடுத்த பாஸை மாக்சிமிலியானோ அர்ராவ்ஹோ கோலாக்க முயன்றார், ஆனால் அது வெளியே சென்றது.
சவுதி அரேபியா சில முறை அட்டாக் செய்ய முயன்றது, ஆனால் உருகுவே அதை எளிதாக முறியடித்தது. ஆட்டம் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் சென்றுகொண்டிருந்தபோது, 30வது நிமிடத்தில் அர்ராவ்ஹோ கொடுத்த பந்தை ஃபெடரிகோ வினாஸ் தலையால் முட்டி கோலாக்க முயன்றார். ஆனால், சவுதி கோல்கீப்பர் முகமது அல்-ஓவைஸ் அபாரமாகத் தடுத்தார். இதையடுத்து, 38வது நிமிடத்தில் சவுதி வீரர் அப்துல்இலாஹ் அல்-அம்ரி அடித்த ஷாட்டை உருகுவே கோல்கீப்பர் ஃபெர்னாண்டோ முஸ்லேரா தடுத்தார். ஆனால், மூன்று நிமிடங்கள் கழித்து, அதாவது 41வது நிமிடத்தில், அல்-அம்ரி மிக அருகில் இருந்து அடித்த கோலை முஸ்லேராவால் தடுக்க முடியவில்லை. இதனால், முதல் பாதி முடிவில் சவுதி அரேபியா 1-0 என முன்னிலை பெற்றது.
டிராவில் முடிந்த போட்டி
இரண்டாவது பாதியில் உருகுவே அணி இன்னும் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கியது. வினாஸ் இரண்டு நல்ல வாய்ப்புகளை உருவாக்கினார். ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் ஃபெடரிகோ வால்வெர்டேவும் சவுதி தடுப்பாட்டத்தை உடைக்க முயன்றார். மானுவல் உகார்டே மற்றும் வால்வெர்டேவுக்கும் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் சவுதி கோல்கீப்பர் அல்-ஓவைஸின் கீப்பிங் மிகச் சிறப்பாக இருந்தது. இறுதியாக, உருகுவேயின் தொடர் முயற்சிக்கு 80வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. வினாஸ் அடித்த ஹெட்டரை அல்-ஓவைஸ் தடுத்தார், ஆனால் பந்து ரீபவுண்டாகி அர்ராவ்ஹோவிடம் சென்றது. அவர் அதைத் தவறவிடாமல் கோலுக்குள் அனுப்பி, ஆட்டத்தைச் சமன் செய்தார். இரண்டாவது பாதியில் உருகுவேயின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு இந்தக் கோல் பரிசாக அமைந்தது.
அதன்பிறகு, இறுதிவரை வேறு கோல்கள் அடிக்கப்படாததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் 66% நேரம் பந்து உருகுவேயின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. உருகுவே அணி 27 ஷாட்களும் (10 ஷாட்கள் ஆன் டார்கெட்), சவுதி அரேபியா 10 ஷாட்களும் (3 ஷாட்கள் ஆன் டார்கெட்) அடித்தன.

