- Home
- குற்றம்
- 12 பேர் ஜாமீனில் வந்து இருக்காங்க! ஒருத்தரையாவது போடணும்! ஸ்கெட்ச் போட்ட ஆம்ஸ்ட்ராங் வலது கரம்!
12 பேர் ஜாமீனில் வந்து இருக்காங்க! ஒருத்தரையாவது போடணும்! ஸ்கெட்ச் போட்ட ஆம்ஸ்ட்ராங் வலது கரம்!
பெரம்பூர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேர் ஜாமீனில் வெளியே வந்ததைத் தொடர்ந்து, பழிதீர்க்கும் நோக்கில் திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆம்ஸ்ட்ராங்கின் கூட்டாளி ஒற்றைக் கண் ஜெயபாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆற்காடு சுரேஷ் கொலை
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அங்கு வந்த கும்பல் பட்டப்பகலில் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
ஆம்ஸ்ட்ராங் மீது ஆத்திரத்தில் சுரேஷ் தரப்பு
இந்த கொலை சம்பவத்தின் போது ஒற்றைக் கண் ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இருவரும் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகள் ஜெயபாலை கொலை செய்ய திட்டமிட்டனர். இதனை எப்படியோ அறிந்து கொண்ட போலீசார் ஜெயபாலையும், அவரின் கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆற்காடு சுரேஷை கொலை செய்தவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் தான் உதவிக்கரம் நீட்டினார் என ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் கருதினர். இதனால், ஆம்ஸ்ட்ராங் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருவேங்கிடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
12 பேர் ஜாமீன்
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன், அஞ்சலை, பிரதீப் உள்ளிட்ட 14 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில், அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் கோகுல் மற்றும் ஹரிஹரன் இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேர் ஜாமீனில் வெளியியே வந்ததை அடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க சென்னை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
ஒற்றைக் கண் ஜெயபால் கைது
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருக்கமான ஒற்றைக் கண் ஜெயபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க திட்டம் தீட்டுவதாக கிடைத்த தகவலை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமழிசையில் பதுங்கியிருந்த ஜெயபாலை வெள்ளவேடு போலீசார் கைது செய்துள்ளனர்.