அதிகாலையிலேயே அலறிய தலைநகரம்! 4 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொ*லை!
டெல்லியின் ரோகிணி பகுதியில், பீகாரைச் சேர்ந்த 4 ரவுடிகள் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பீகாரில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவர்கள், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பெரிய குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்மிட்டனர்.

தலைநகர் டெல்லியில் என்கவுண்டர்
டெல்லியில் ரோகிணியில் உள்ள பகதூர் ஷா மார்க்கில், டாக்டர் அம்பேத்கர் சௌக் மற்றும் பன்சாலி சௌக் இடையே அதிகாலை 2:20 மணியளவில் காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 4 ரவுடிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பீகாரின் சீதாமர்ஹியைச் சேர்ந்த ரஞ்சன் பதக் (25), பிம்லேஷ் மஹ்தோ என்கிற பிம்லேஷ் சஹானி (25), மனிஷ் பதக் (33), அமன் தாக்கூர் (21) ஆகியோர் இந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நால்வரும் பீகாரில் பல கொலைகள் மற்றும் ஆயுதக் கொள்ளைகள் உட்பட பல்வேறு கொடூரமான வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர்.
பீகார் சட்டமன்ற தேர்தலை சீர் குலைக்க சதி
குறிப்பாக பீகாரில் பிரம்மஸ்ரீ சேனா மாவட்டத் தலைவர் கணேஷ் சர்மா, மதன் சர்மா மற்றும் ஆதித்ய சிங் ஆகியோரின் கொலைகளில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கும்பல் ஒரு பெரிய குற்றச் செயலைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு மற்றும் பீகார் போலீஸ் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.
கேங்ஸ்டர்கள் சுட்டுக்கொலை
சந்தேக நபர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர்கள் எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் பதிலடி கொடுத்தனர். இருதரப்பிற்கும் இடையில் சிறிது நேரம் மோதல் ஏற்பட்டது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட கேங்ஸ்டர்கள் நால்வரும் படுகாயமடைந்தனர். பின்னர் அருகிலுள்ள பி.எஸ்.ஏ மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த என்கவுன்ட்டர் ஆபரேஷனில் மூன்று போலீசார் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.