20 நாட்களில் 4வது முறை.. தமிழகத்தில் ரவுடிகள் மீது தொடரும் துப்பாக்கிச்சூட்டிற்கு இதுதான் காரணமா..!
கடந்த 20 நாட்களில் மட்டும் திருச்சி, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் சுட்டு பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் கொலை கொள்ளை வழிப்பற்றி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை நகைக்கடை கொள்ளை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளை கோவையில் நீதிமன்றம் அருகில் பொதுமக்கள் மத்தியில் கொடூரக் கொலை ஆகிய சம்பவங்களே தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரத்துக்கு சாட்சியம் சொல்கின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் நாடமாடவே அச்சப்படுவதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கில் அவர்களுக்கும் எச்சரிக்கும் விதமாகவும் ரவுடி மீதான துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த 20ம் தேதி திருச்சியில் துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து நகைகளை மீட்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே சென்றபோது, போலீசாரின் ஜீப்பில் இருந்து இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். துரத்திப்பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து தற்காப்புக்காக துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதேபோல் கடந்த 22ம் தேதி சென்னை அயனாவரத்தில் உதவி ஆய்வாளர் சங்கர் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது இருச்சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் காவலரை இரும்பி கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தனர். இதனையடுத்து 2 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால், பிரபல ரவுடி பெண்டு சூர்யா மட்டும் தப்பித்து தலைமறைவானார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை அயனாவரம் பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வந்த போது திடீரென பெண்டு சூர்யா, கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடினார். கத்திக்குத்தில் காவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர். தப்பியோடிய ரவுடி பெண்டு சூர்யாவை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மீனா முழங்காலில் சுட்டு பிடித்தார்.
கடந்த 28ம் தேதி மதுரை வளர் நகர் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை மேற்கொண்டதில் முக்கிய குற்றவாளி வினோத் என்பது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தேடுவதை அறிந்த ரவுடி வினோத் மதுரை மாட்டுதாவணி பகுதியில் பதுங்கி இருந்துள்ளார். இதனை அறிந்த சிறப்பு படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பிக்க முயன்ற அவர் பயங்கர ஆயுதத்தால் காவலர்களை தாக்கம் உட்பட்ட போது காவலர்கள் தற்காப்புக்காக ரவுடி வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
coimbatore
அதேபோல் இன்று கோவையில் முன்விரோதம் காரணமாக ரவுடி சத்தியபாண்டி(32) கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் காஜா உசேன் ஆல்வின் சபூல்கான் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தார்.
இதனையடுத்து தற்காப்புக்காக இடதுகால் முட்டிக்கீழ் சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து துப்பாக்கி சம்பங்கள் நடைபெற்று வருவது தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு இந்த துப்பாக்கிச்சூடு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.