நாட்டை உலுக்கிய லிவ்-இன் பார்ட்னர் கொலைகள்!
அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், சமீபத்தில் நடந்த நாட்டையே உலுக்கிய கொலைகள் பற்றி ஒரு பார்வை
சரஸ்வதி வைத்யா கொலை
சரஸ்வதி வைத்யா கொலை
மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் அமைந்துள்ள வீட்டில் மனோஜ் சாஹ்னி (56) என்பவரும், சரஸ்வதி வைத்யா (32) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த வீட்டில் இருந்து அழுகிய நிலையில், துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்ட சரஸ்வதி வைத்யாவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சரஸ்வதி வைத்யா கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் உடல் மர அறுவை இயந்திரம் கொண்டு இரண்டாக துண்டிக்கப்பட்டு, பின்னர் உடல் பாகங்கள் சிறிது சிறிதாக வெட்டப்பட்டு அவை குக்கரில் வேக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் சாஹ்னியை போலீசார் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷ்ரத்தா வாக்கர் கொலை
ஷ்ரத்தா வாக்கர் கொலை
மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஷ்ரத்தா வாக்கரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த அஃப்தாப் பூனவாலாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இருவரும் டெல்லிக்குச் சென்று தனியாக வசித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் பார்ட்னர்களாக வசித்து வந்த இவர்களிடையே, அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட சண்டையையடுத்து, அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஃபிரிட்ஜில் வைத்து ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி உள்ளார். நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் ஆமின் பூனவாலாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
நிக்கி யாதவ் கொலை
நிக்கி யாதவ் கொலை
டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிவ் இன் பார்ட்னர்களாக ஹரியாணாவை சேர்ந்த நிக்கி யாதவ் (28), சாஹில் கெல்லட் ஆகியோர் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, சாஹில் கெல்லட்டுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆகியுள்ளது. திருமணம் முடிவானதை அறிந்த நிக்கி யாதவ், சாஹிலுடன் சண்டையிட்டுள்ளார். இதனால், அவரை தீர்த்துக்கட்ட தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சாஹில் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, தந்தை வீரேந்தர், உறவினர்களான ஆஷிஷ், நவீன் மற்றும் இரு நண்பர்களுடன் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நிக்கி யாதவை கொலை செய்து, அவரது உடலை தான் நடத்தி வந்த உணவகத்தின் ஃபிரிட்ஜில் பதுக்கி வைத்துள்ளார். இந்த வழக்கில் சாஹில் கெல்லாட் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேகா டோர்வி கொலை
மேகா டோர்வி கொலை
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள நலசோபரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேகா டோர்வி (37) என்ற பெண்ணும், அவரது காதலர் ஹர்திக் ஷா (30) என்பவரும் லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். ஹர்திக் வேலையில்லாமல் இருந்த நிலையில் வீட்டு செலவுகளை மேகா மட்டுமே கவனித்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் சண்டை முற்றியதில், மேகாவை ஹர்திக் கொலை செய்து, படுக்கை அறையில், படுக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் மறைத்து வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஹர்திக் ஷாவை கைது செய்துள்ளனர்.
அகான்ஷா கொலை
அகான்ஷா கொலை
ஹைதராபாத்தை சேர்ந்த அகான்ஷா (23) என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், மர்மமான முறையில் அவரது குடியிருப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் அவரது முன்னாள் லிவ் இன் பார்ட்னரான அர்பித் என்பவர் அவரை கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகான்ஷாவும் அர்பித்தும் லிவ்-இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனாலும், பெங்களூரு சென்று அகான்ஷாவை அர்பித் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் அகான்ஷாவை அர்பித் கொலை செய்துள்ளார். அதன்பிறகு, தற்கொலை செய்து கொண்டதுபோல் காட்டுவதற்காக முயற்சி செய்ததாகவும், அதில் தோல்வியடைந்த காரணத்தால், அகான்ஷாவின் உடலை தரையில் வைத்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்பின் கதவைப் பூட்டிவிட்டு அங்கிருந்து அர்பித் தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்.