பாக்ஸ் ஆபிஸில் கூலி படத்துக்கு தண்ணிகாட்டும் வார் 2..! 6ம் நாள் வசூலில் யார் டாப்பு?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடித்த வார் 2 ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Coolie vs War 2 Box Office
2025-ம் ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் மோதலாக கூலி மற்றும் வார் 2 படங்களின் வெளியீடு இருந்தன. இந்த இரண்டு படங்களும் கடந்த ஆகஸ்ட் 14ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகியது. இதில் வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தனர். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருந்தார். அதேபோல் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நாகர்ஜுனா, அமீர்கான், சோபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. இந்த இரண்டு படங்களின் ஆறாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
கூலி 6ம் நாள் வசூல் நிலவரம்
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நான்கு நாட்களில் உலகளவில் 404 கோடி வசூலித்திருந்தது. இதையடுத்து 5ம் நாளில் 18 கோடி வசூலித்த இப்படம், ஆறாம் நாளில் அதைவிட சரிவை சந்தித்துள்ளது. 6ம் நாளில் இப்படத்திற்கு இப்படம் வெறும் 15 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 10.36 கோடி வசூலித்துள்ளதாம். இப்படத்தின் தமிழ் வெர்ஷன் 5.50 கோடியும், இந்திப் பதிப்பு 2.54 கோடியும், தெலுங்கு வெர்ஷன் 2.19 கோடியும், கன்னட பதிப்பு 13 லட்சமும் வசூலித்துள்ளது. இதன்மூலம் இப்படம் ஒட்டுமொத்தமாக 6 நாட்களில் ரூ.437 கோடி வசூலித்துள்ளது.
வார் 2 வசூல் நிலவரம்
அதேபோல் ஹிருத்திக் ரோஷனின் வார் 2 திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.275 கோடி வசூலித்திருந்தது. ஐந்தாம் நாள் மட்டும் ரூ.11 கோடி வசூலித்திருந்த இப்படம் ஆறாம் நாளில் சற்று பிக் அப் ஆகி இருக்கிறது. அதன்படி 6ம் நாளில் மட்டும் இப்படம் உலகளவில் ரூ.13 கோடி வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.8.34 கோடி வசூலித்திருக்கிறது. அதில் இப்படத்தின் இந்தி வெர்ஷன் 6.70 கோடியும், தெலுங்கு பதிப்பு 1.53 கோடியும், தமிழ் வெர்ஷன் வெறும் 11 லட்சமும் வசூலித்துள்ளது. இதன்மூலம் ஆறு நாட்கள் முடிவில் வார் 2 திரைப்படம் உலகளவில் ரூ.288 கோடி வசூலித்திருக்கிறது.
யார் டாப்பு?
6ம் நாள் வசூல் நிலவரத்தை பொறுத்தவரை கூலி படம் 15 கோடியும், வார் 2 படம் 13 கோடியும் வசூலித்துள்ளது. ஐந்தாம் நாள் வசூலோடு ஒப்பிடுகையில் கூலி 2 கோடி கம்மியாகவும், வார் 2 திரைப்படம் 2 கோடி அதிகமாகவும் வசூலித்திருக்கிறது. இதன்மூலம் வார் 2 படம் கூலியை விட பாக்ஸ் ஆபிஸில் ஏற்றம் கண்டுள்ளது தெரிகிறது. இதே நிலை நீடித்தால் கூலி படம் ஜெயிலர் பட வசூலை கூட நெருங்காது போல தெரிகிறது. வார் 2 படமும் கூலி படத்தை வசூலில் எட்டிப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.