முகம் கருப்பாக இருந்துச்சு.. அடிக்கடி மருந்து சாப்பிட்டார்.. உண்மையை உடைத்த சிங்கம்புலி.!
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு குறித்து அதிர்ச்சி தெரிவித்த நடிகர் சிங்கம்புலி, ரோபோ சங்கரின் உடல்நிலை மற்றும் அவருடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

ரோபோ சங்கர் பற்றி சிங்கம்புலி
தமிழ் சினிமாவை சிரிப்பால் குலுக்கிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அவர், இளமையிலேயே மேடை நாடகம், மைம், நடனம் போன்ற கலைகளில் ஆர்வம் காட்டினார். சின்னச் சின்ன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் கலைத்துறைக்கு அடியெடுத்து வைத்தார். டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
ரோபோ சங்கர் மரணம்
அவரது காமெடி டைமிங், உடல் மொழி, இயல்பான உரையாடல்கள் ரசிகர்களை சிரிப்பில் மூழ்கடித்தன என்றே கூறலாம். சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று மீண்டிருந்தார். சமீபத்தில் உடல்நலம் மோசமடைந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு உயிரிழந்தார். ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகுக்கு பெரிய இழப்பு.
நடிகர் ரோபோ சங்கர் மறைவு
எப்போதும் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பரப்பிய கலைஞராக அவர் ரசிகர்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். ரோபோ சங்கர் பற்றி அவரது நண்பரும், பிரபல நடிகருமான சிங்கம்புலி கூறியதாவது, “ரோபோ சங்கர் மறைவு ரொம்பவே அதிர்ச்சியளிக்கிறது. நான் இப்போது கோவையில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். ஒரு வாரம் முன்பு ரோபோ சங்கர் என்னைத் தொடர்புகொண்டார். நான் பிஸியாக இருந்ததால் பிறகு பேசுவோம் என்றேன்.
ரோபோ சங்கர் உடல்நிலை
ஆனால் இப்போது திடீரென அவரது மறைவு செய்தி கேட்க வேண்டியுள்ளது. அவர் உடல்நிலை பிரச்சினை என்ன என்பதும் புரியவில்லை. எப்போதும் உடலை நன்றாக பராமரித்து வந்தவர். உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தவர். உண்மையிலேயே அவர் உடல்நிலை பார்த்தால் நாமே பொறாமைப்படுவோம். “ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக இருந்தபோது, அடிக்கடி மருந்து எடுத்துக்கொண்டதை பார்த்தேன்.
சிங்கம்புலி உருக்கமான பேச்சு
‘என்னாச்சு?’ என்று கேட்டபோது, ‘சிறிய பிரச்சினை தான், விரைவில் சரியாகிடும்’ என்றார். அதனால் பெரிய விஷயம் இல்லை என்று எண்ணினேன். ஆனால் அவர் இவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.” “சில நாட்களுக்குப் பிறகு அவர் முகம் கருப்பாக இருந்தது. நான் கவனித்தபோது, ‘அது மருந்தின் பக்கவிளைவுதான், சீக்கிரமே சரியாகிடும்’ என்று சிரித்தபடி சொன்னார். அவருடைய மன உறுதி அப்போதும் அசைக்க முடியாதது போலவே இருந்தது.
சிங்கம்புலி அதிர்ச்சி
ஆனால் இன்று அவர் இல்லையே என்பதை ஏற்க முடியவில்லை. “மனைவி, மகள், பேரனுடன் எப்போதும் சந்தோஷமாக இருந்தவர். நல்ல நடிகர், சிறந்த டான்சர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் மட்டுமல்ல, நல்ல மனிதர். ஒவ்வொரு தருணமும் நினைவில் நிற்கிறது. நல்ல தம்பி, நல்ல நண்பர் என்று நினைத்த ரோபோ சங்கர் இப்போது இல்லை என்பது பெரும் வேதனை” என்று கூறினார்.