- Home
- Cinema
- Robo sankar: 'மிஸ்டர் மதுரை...' காலன் கொண்டு போன கட்டுமஸ்தான உடம்பு... குடி உயிரைக் குடிக்கும்..!
Robo sankar: 'மிஸ்டர் மதுரை...' காலன் கொண்டு போன கட்டுமஸ்தான உடம்பு... குடி உயிரைக் குடிக்கும்..!
தனக்கு பின் ஒரு குடும்பம் நம்மை நம்பி இருக்கிறது என்று நினைத்தால் இந்த போதை பழக்கத்தில் இருந்து ஈசியாக வெளிவந்து விடலாம். தயவு செய்து கெட்ட பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம். என் நிலைமையை பார்த்த பின்பாவது எல்லோரும் நல்வழியை பின்பற்றுங்கள்- ரோபோ சங்கர்

சில்வர் பெயிண்ட் அடித்து... கட்டுமஸ்தான உடலை காட்டி
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரைத்துறையினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உயிரிழப்பு எல்லோருக்கும் முக்கியமான செய்தியை சொல்லிவிட்டு சென்றிருக்கிறது. அது குடி உயிரைக் கொல்லும்.
சக நடிகரான காதல் சுகுமார், ரோபோ சங்கரின் மரணம் குறித்து தனது முகநூல் பதிவில், ‘‘மதுரையில் ஒரே கலைக்குழுவில் அறிமுகமானோம்... சமகாலத்தில் சென்னைக்கு கனவுலகத்தை தேடி ஓடி வந்தோம். 97 களில் 200 ரூபாய்க்காக 'மிஸ்டர் மதுரை' சங்கர் சினிமா வாய்ப்பு வேண்டும் என மேடையில் ஆடும்போது யாராவது இயக்குநர் கண்களில் பட்டுவிடவேண்டும் என சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு கட்டுமஸ்தான உடலை காட்டி ரோபோ நடனமாடுவார். இயல்பில் நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். பலகுரல் மன்னன். சினிமா அவர் திறமைக்கு வாய்ப்பளித்தது.
சிம்பு நீங்க பெத்த புள்ளை. நான் உங்க தத்துப்புள்ள..
உலகநாயகன் அவர்களின் தீவிர ரசிகர். அவரைப்போல் ஒரு சக நடிகன் கமல் சார் அவர்களை காதலிக்கவில்லை என்றே சொல்லலாம். சமீபத்தில் டி.ராஜேந்தர் அண்ணன், என்னையும் அவரையும் வைத்து ‘காதல் கலாட்டா’ எனும் படத்தை இயக்க கதை சொன்ன போது.. ரோபோ சங்கர் சொன்ன வார்த்தை... "அண்ணே சிம்பு நீங்க பெத்த புள்ளை. நான் உங்க தத்துப்புள்ள.." இதற்கு டி.ராஜேந்திரன் ஏனோ கண்கலங்கினார். இன்று அவரால் சிரிக்க வைத்தவர்கள் அழவைத்து அவசரப்பட்டுக்கொண்டார். அன்பர்களே... அவர் விட்டு சென்ற செய்தி ஒன்றுதான் எனக்கும் நமக்கும். உடல்தான் நமக்கு எல்லாமே. அதை விட்டுவிட்டால் உயிர் நம்மை விட்டுவிடும். குடி உயிரைக் குடிக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
குடி தனக்கு கேடு விளைவித்ததை ரோபோ சங்கரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் ஐந்து மாத காலமாக உடல்நிலை குறைவால் ரொம்பவே அவதிப்பட்டு வந்தார். இதனால் இவருடைய தோற்றம் மெலிந்த நிலையில் இருந்ததால் சர்ச்சையாக்கப்பட்டது.
பட்ட பின்பு புத்தி தெளிந்த ரோபோ சங்கர்
மஞ்சள் காமாலை ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். மீண்டும் அவர் பிழைப்பதே கஷ்டம் என அனைவரும் பேசிய நிலையில், அதில் இருந்து மீண்டு வந்தார். ரோபோ சங்கர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த நிலையில், தான் பட்ட கஷ்டம் மற்றவர்கள் யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் மீடியா முன் எல்லா உண்மைகளியும் போட்டுடைத்தார். ‘‘ காய்ச்சலும், தலைவலியும் தெரியும் என்பது போல, பட்ட பின்பு தான் எனக்கு புத்தி தெளிந்திருக்கிறது. போதை என்பது தவறான ஒரு பாதை. அதற்கு முன் உதாரணமாக உங்கள் அனைவரது முன்னாடியும் நான் அவஸ்தைப்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறேன்.
சமீபத்தில் அனைவரும் என்னைப் பற்றியான விஷயங்களை யூடியூப் மூலமாக தெரிந்திருப்பீர்கள். எனக்கு மஞ்சள் காமாலை வந்ததால் படாத பாடு பட்டிருக்கிறேன். அதற்கு காரணம் சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள் என்னிடம் இருந்ததால் இந்த நிலைமையை நான் அனுபவித்து இருக்கிறேன்.
வாட்டிய வறுமையின் கொடூரம்
ஆறு மாதமாக சாவின் விளிம்பு வரை சென்று அதனுடைய கஷ்டங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்து இருக்கிறேன். அதனால் எல்லா கெட்ட பழக்கங்களையும் தற்போது அறவே விட்டுவிட்டு நல்ல உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, முறையான உடற்பயிற்சி, நல்ல நண்பர்களை என் அருகில் வைத்துக் கொண்டு என் உடம்பை தேற்றி இருக்கிறேன்.
அத்துடன் எப்பொழுதும் சிரித்துக் கொண்டு சந்தோசமாக இருங்கள். வாழ்க்கை நல்லபடியாக அமையும். தனக்கு பின் ஒரு குடும்பம் நம்மை நம்பி இருக்கிறது என்று நினைத்தால் இந்த போதை பழக்கத்தில் இருந்து ஈசியாக வெளிவந்து விடலாம். அதனால் தயவு செய்து கெட்ட பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம். என்னுடைய நிலைமையை பார்த்த பின்பாவது எல்லோரும் நல்வழியை பின்பற்றுங்கள்’’ என்று அறிவுரை கொடுத்திருந்தார்.
ரோபோ சங்கர், மதுரை, சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் படித்தவர். ரோபோ என்கிற அந்த பெயருக்கு பின்னால் வறுமையின் கொடூரம் மட்டுமே இவருக்கு இருந்தது. உடுத்தும் உடை கூட நான்கு, ஐந்து தான் வைத்திருப்பார். கல்லூரியில் படிக்கும் போதே நடன நாட்டிய கலைக்குழுவிற்கு செல்வார். ரோபோ கெட்டப்பிற்கு சில்வர் கோட்டிங்கை தன் உடம்பில் பூசுவார். அதை உடம்பில் பூச குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு மேலாகும்.
குடியைக் கெடுத்த குடி
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவு, படிப்பு செலவை பார்த்து கொள்வார். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர். அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார். கல்லூரிக்கு பஸ்ஸில் செல்லும் போது மதுரை கிரைம் பிரான்ச், தெற்குவாசல் பகுதியை அலர விடுவார். ரோபோ சங்கர் இல்லாமல் கடைசி பஸ் கிளம்பாது, ஒரு பெரிய கேங்கை உடன் வைத்திருப்பார்.
அசத்த போவது யாரு? நிகழ்ச்சியின் மூலமாக வெளி உலகிற்கு தெரிந்தார். தனி திறமை, விடாமுயற்சியால் திரைப்படத்துறையில் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்தவரை காலம் சீக்கிரமே அழைத்து சென்று விட்டது. குடி குடியைக் கெடுக்கும்.