அனல்பறக்க ஆரம்பமான தனுஷின் D54 பட ஷூட்டிங் - உடன் இத்தனை நடிகர், நடிகைகள் நடிக்கிறார்களா?
போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் D54 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Dhanush D54 Shoot Begins
தமிழ் சினிமாவில் செம பிசியான ஹீரோ என்றால் அது தனுஷ் தான். அவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் ராயன் படம் வெளியானது. இந்த ஆண்டு தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இதையடுத்து அவர் இயக்கி உள்ள இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான டப்பிங் மற்றும் ரீ-ரெக்கார்டிங் பணிகளில் பிசியாக இருந்த தனுஷ், சைடு கேப்பில் தன்னுடைய அடுத்த பட ஷூட்டிங்கையும் தொடங்கி இருக்கிறார். அவரின் 54வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
தனுஷின் D54
தனுஷ் நடிக்கும் D54 படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இவர் போர்த்தொழில் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்தவர் ஆவார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். பிரேமலு படம் மூலம் அறிமுகமான மமிதா, தற்போது தமிழில் விஜய்யின் ஜனநாயகன், சூர்யாவுடன் வெங்கி அட்லூரி படம், விஷ்ணு விஷால் ஜோடியாக இரண்டு வானம் போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது D54 படம் மூலம் முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தனுஷின் நண்பர் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்க உள்ளார்.
D54 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள்?
D54 படத்தில் தனுஷுடன் கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர்களான சூரஜ் வெஞ்சரமுடி மற்றும் ஜெயராம், நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி, நடிகர் கருணாஸ், நடிகர் நிதின் சத்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணியாற்றுகிறார். படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்கிறார். சில நேரங்களில் ஆபத்தில் இருப்பது தான் உயிர்வாழ ஒரே வழி என்கிற கேப்ஷன் உடன் டி54 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு உள்ளனர். அந்த போஸ்டரில் பொட்டல் காட்டின் நடுவே சோகமாக நின்றபடி இருக்கிறார் தனுஷ். அவர் பின்னணியில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
பூஜையுடன் தொடங்கிய D54 ஷூட்டிங்
D54 திரைப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுவென முடிக்க திட்டமிட்டு உள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி, ராயன் மற்றும் குபேரா ஆகிய மூன்று திரைப்படங்களும் தொடர்ச்சியாக 100 கோடிக்கு மேல் வசூலித்ததால், டி54 படமும் அந்த லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்த் தொழில் படத்தை போல் செம ட்விஸ்ட்டுகளுடன் விக்னேஷ் ராஜா D54 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதுதவிர படக்குழுவினரும் கலந்துகொண்டார்கள். நடிகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் வந்து கலந்துகொண்டார்.