- Home
- Career
- 8 மணி நேரம் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்குறேன்.. கதறும் இளைஞர்! கார்ப்பரேட் உலகின் மறுபக்கம்!
8 மணி நேரம் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்குறேன்.. கதறும் இளைஞர்! கார்ப்பரேட் உலகின் மறுபக்கம்!
Task Masking வேலையில் பிஸியாக இருப்பது போல் நடிப்பது 'டாஸ்க் மாஸ்கிங்' எனப்படும். இது ஏன் நடக்கிறது? இதைத் தவிர்ப்பது எப்படி? நிகில் காமத் கருத்து மற்றும் முழு விவரம் உள்ளே.

Task Masking ரெட்டிட் (Reddit) பதிவும் இளையரின் புலம்பலும்
சமீபத்தில் 'ரெட்டிட்' சமூக வலைதளத்தில் ஒரு இன்டர்ன் (பயிற்சி ஊழியர்) வெளியிட்ட பதிவு ஒன்று கார்ப்பரேட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஆரம்பத்தில் களப்பணியில் உற்சாகமாக இருந்த அந்த இளைஞர், அலுவலகத்திற்குள் மாற்றப்பட்டதும் தனது வேலை 'நாடகம்' போல் மாறிவிட்டதாகக் வேதனை தெரிவித்துள்ளார். "நான் 8 மணி நேரம் சும்மா அமர்ந்து, வேலை செய்வது போல் நடிக்கிறேன். எக்செல் ஷீட்களைத் திறப்பதும் மூடுவதுமாக நேரம் கழிகிறது. சும்மா இருப்பதை மேலாளர் பார்த்தால், யாருக்கும் தேவையில்லாத வேலையைக் கொடுத்து தண்டிக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பளத்திற்காக மட்டுமே இந்தப் போலி நடிப்பைத் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது சோம்பேறித்தனமா? இல்லை கலாச்சாரமா?
அந்தப் பதிவின் கீழ் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அலுவலகங்களில் பலர் வேகமாக நடப்பது, கணினியை வெறித்துப் பார்ப்பது, கோப்புகளைப் புரட்டுவது எனப் பிஸியாக இருப்பது போலவே காட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் அங்கு வேலை நடக்கிறதோ இல்லையோ, 'நான் வேலை செய்கிறேன்' என்று காட்டுவதுதான் முக்கியமாகிவிட்டது. இது சோம்பேறித்தனமா அல்லது 'பிஸியாகத் தெரிவதுதான் வேலை' என்ற மோசமான அலுவலக கலாச்சாரமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
'டாஸ்க் மாஸ்கிங்' (Task Masking) என்றால் என்ன?
இந்தச் செயல்பாட்டிற்கு இப்போது ஒரு பெயரும் வந்துவிட்டது. அதுதான் 'டாஸ்க் மாஸ்கிங்'. அதாவது, உருப்படியான எந்த வேலையும் செய்யாமல், உற்பத்தித் திறன் மிக்கவர் போலக் காட்டிக்கொள்வது. தேவையற்ற மீட்டிங்கில் அமர்வது, லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு அறைக்குச் செல்வது போன்றவை இதில் அடங்கும். இது தனிநபர் பிரச்சனை அல்ல, இது ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஜெரோதா நிறுவனர் நிகில் காமத் சொன்ன உண்மை
இது ஜூனியர் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, பெரிய தலைவர்களுக்கும் பொருந்தும். பிரபல பங்கு வர்த்தக நிறுவனமான ஜெரோதாவின் (Zerodha) நிறுவனர் நிகில் காமத், 'WTF' பாட்காஸ்டில் பேசும்போது, "நான் முன்பு வேலை பார்த்த இடங்களில், பெரும்பாலான நேரங்களில் வேலை செய்வது போல் நடித்திருக்கிறேன். பாஸ் அருகில் இருக்கும்போது பிஸியாகக் காட்டிக்கொள்வதே வேலையாக இருந்தது" என்று ஒப்புக்கொண்டார். 10 முதல் 12 மணி நேரம் தொடர்ந்து யாராலும் ஆக்கப்பூர்வமாக வேலை செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.
ஏன் இந்த கலாச்சாரம் வளர்கிறது?
ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் (Return-to-office) போக்கு அதிகரித்துள்ள நிலையில், 'கண் பார்வைக்குத் தெரிவதுதான் வேலை' (Visibility = Value) என்ற நிலை உருவாகியுள்ளது. லேட்டாக வீட்டுக்குச் செல்பவரே கடின உழைப்பாளி என்றும், சீக்கிரம் செல்பவர் வேலையில் நாட்டமில்லாதவர் என்றும் தவறாகக் கணிக்கப்படுகிறார்கள். இதனால், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்கள் 'நடிக்க'த் தொடங்குகிறார்கள்.
நிர்வாகத்தின் தோல்வியே காரணம்
பெரும்பாலும் இது ஊழியர்களின் ஒழுக்கமின்மையாகச் சித்திரிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இது நிர்வாகத்தின் தோல்வி. ஒரு ஊழியர் தனது வேலையை விரைவாக முடித்துவிட்டால், அவருக்குப் பாராட்டு கிடைப்பதற்குப் பதில், தேவையற்ற கூடுதல் வேலைகள் திணிக்கப்படுகின்றன. இதை உணர்ந்துகொண்ட ஊழியர்கள், வேலையை மெதுவாக்கி, நாள் முழுவதும் இழுத்தடிக்கிறார்கள். இதனால் நிர்வாகத்திற்குத் தனது ஊழியர்களின் உண்மையானத் திறன் என்னவென்றே தெரியாமல் போகிறது.
இதற்கு என்ன தான் தீர்வு?
எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார்கள் என்பதை விட, என்ன வேலையை முடித்தார்கள் என்பதை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள வேண்டும். தெளிவான இலக்குகள் இல்லாதவரை, அலுவலகங்கள் வெறும் நாடக மேடைகளாகவே தொடரும். அந்த ரெட்டிட் இளைஞர் கூறியது போல், "மாட்டிக் கொள்ளாமல் நடிப்பது எப்படி?" என்ற கவலையிலேயே ஊழியர்களின் பாதி ஆற்றல் வீணாகும் நிலை மாற வேண்டும்.

