யுபிஎஸ்சி அதிரடி மாற்றம்.. சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்!
யுபிஎஸ்சி (UPSC) 2025 சிவில் சர்வீசஸ் நேர்காணல் தேதியில் மாற்றம் செய்துள்ளது; ஜனவரி 22ல் நடக்கவிருந்த நேர்காணல் பிப்ரவரி 27க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் மற்றும் வனப்பணித் தேர்வு அறிவிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

யுபிஎஸ்சி தேர்வு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2025-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) நேர்காணல் தேதியில் மாற்றங்களைச் செய்துள்ளது. அதேபோல், 2026-ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
UPSC நேர்காணல் தேதியில் மாற்றம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2025-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வு (Personality Test) அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2026 ஜனவரி 22 அன்று நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை (Full Dress Rehearsal) காரணமாக, அன்றைய தினம் பிற்பகல் நடைபெறவிருந்த நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 22 மதியம் நேர்காணல் இருந்த தேர்வர்களுக்கு, தற்போது பிப்ரவரி 27, 2026 அன்று காலை அமர்வில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தேர்வர்கள் இந்த மாற்றத்தைக் கவனித்து தங்கள் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேர்காணலுக்குத் தேவையான ஆவணங்கள்
நேர்காணலில் பங்கேற்கும் தேர்வர்கள் பின்வரும் ஆவணங்களை அசல் மற்றும் நகல்களாகக் கொண்டு வர வேண்டும்:
• கல்வித் தகுதிச் சான்றிதழ்கள்.
• வயது மற்றும் சமூக அந்தஸ்துக்கான சான்றிதழ்கள்.
• இடஒதுக்கீடு கோருபவர்கள் (OBC/SC/ST/EWS/PwBD) அதற்கான உரிய படிவங்கள்.
• பயணப்படி படிவம் (Travel Allowance Form).
2026 சிவில் சர்வீசஸ் தேர்வுகள் தள்ளிவைப்பு
மற்றொரு முக்கிய அறிவிப்பாக, 2026-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் (CSE) மற்றும் இந்திய வனப்பணி (IFS) தேர்வுகளுக்கான அறிவிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
முந்தைய அட்டவணைப்படி, இந்த அறிவிப்புகள் ஜனவரி 14, 2026 அன்று வெளியாக வேண்டியிருந்தது. நிர்வாகக் காரணங்களால் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தக்கட்ட அறிவிப்பு மற்றும் விண்ணப்பத் தேதிகள் விரைவில் UPSC இணையதளத்தில் வெளியாகும்.
தேர்வு காலண்டர்
UPSC முன்னதாக வெளியிட்ட காலண்டரின்படி, 2026-ஆம் ஆண்டிற்கான முதற்கட்டத் தேர்வு (Preliminary Exam) மே 24 முதல் மே 31, 2026க்குள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அறிவிப்பு தாமதமானாலும், தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக UPSC இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

