- Home
- Career
- அரசு கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள்: புதிய அறிவிக்கை வெளியீடு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…
அரசு கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள்: புதிய அறிவிக்கை வெளியீடு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…
TRB Assistant Professor Recruitment தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியீடு. அக்டோபர் 17 முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹57,700 முதல் ₹1,82,400 வரை.

TRB Assistant Professor Recruitment அரசு கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் டிஆர்பி-இன் புதிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப உயர்கல்வித்துறை முடிவெடுத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இன்று (16.10.2025) புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் அரசாணை நிலை எண்.230 மற்றும் 231-இன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் மார்ச் 14, 2024 அன்று 4,000 காலிப் பணியிடங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிக்கை இரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய அறிவிக்கை எண்: 04/2025 வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் 2,630 தற்போது காலிப்பணியிடங்கள், 72 முந்தைய பணியிடங்கள்/பற்றாக்குறை காலியிடங்கள் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் அடங்கும்.
விண்ணப்ப செயல்முறை, கால அவகாசம் மற்றும் சம்பள விவரம்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.trb.tn.gov.in) வாயிலாக ஆன்லைன் (Online Application) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் பதிவு அக்டோபர் 17, 2025 முதல் தொடங்கி நவம்பர் 10, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேவையான கல்வித்தகுதியும் வயது வரம்பும்
உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க, தேர்வர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், UGC/CSIR NET அல்லது SLET/SET ஆகியவற்றில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். சில குறிப்பிட்ட ஆண்டுகளில் பிஎச்.டி முடித்தவர்களுக்கு இதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் தேதியான 01.07.2025-இன் படி, 57 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
தேர்வு கட்டணம் மற்றும் மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கான பிரத்யேக சலுகைகள்
தேர்வு கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், SC, SCA, ST பிரிவினர் ரூ.300 மட்டும் செலுத்தினால் போதுமானது.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிக்கைகளான 12/2019 மற்றும் 02/2024-இன்படி விண்ணப்பித்தவர்கள் அனைவரும் இப்புதிய அறிவிக்கையின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு மட்டும் விண்ணப்பத்திற்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
உதவிப் பேராசிரியர் தேர்வு முறை விவரங்கள்
ஆட்கள் தெரிவு செய்யப்படும் முறையானது, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கட்டாயத் தமிழ் பகுதி தாள் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு 15 மதிப்பெண்களும், அனுபவத்திற்கு 15 மதிப்பெண்களும் வழங்கப்படும். ஆக மொத்தம் 230 மதிப்பெண்களுக்கு பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.