- Home
- Career
- வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு வழங்குகிறது உதவித்தொகை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு வழங்குகிறது உதவித்தொகை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி தோல்வி/ எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி, எச்.எஸ்.சி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம்.
விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய தகுதிகள்:
விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது 40-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/பழங்குடியினர் எனில் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யாதவராகவும், சொந்த தொழில் தொடங்காதவராகவும் இருக்க வேண்டும்
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உள்ளவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்களில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு நிறைவடைந்தவர்கள், சுய உறுதிமொழி ஆவணத்துடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.