- Home
- Career
- TRB Assistant Professor Recruitment: உதவிப் பேராசிரியர்களுக்கான போட்டி தேர்வு ஜூலையில் நடைபெறுமா? கள நிலவரம் என்ன?
TRB Assistant Professor Recruitment: உதவிப் பேராசிரியர்களுக்கான போட்டி தேர்வு ஜூலையில் நடைபெறுமா? கள நிலவரம் என்ன?
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உ:ள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு ஜூலையில் நடைபெறுமா? என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.

teachers recruitment board: உதவிப் பேராசிரியர் பணி நியமனம்
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பு, கல்வியாளர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஒத்திவைப்பு
இதற்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று நடைபெறவிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வான செட் தேர்வு (SET Exam) ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான தேர்வும் நடைபெறவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, செட் தேர்வு கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வர்களின் எதிர்பார்ப்பும், அரசாங்கத்தின் அறிவிப்பும்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்காக TRB மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வு எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட பள்ளி கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில் ஒரு தகவல் இடம்பெற்றிருந்தது. மேலும், TRB வெளியிட்ட உத்தேச ஆண்டு அட்டவணையில், இந்த 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலையில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், தேர்வர்கள் ஒருபுறம் உற்சாகமடைந்தாலும், மறுபுறம் சில சந்தேகங்களுடனும் காணப்படுகின்றனர்.
வெவ்வேறு தகவல்கள்
போட்டித் தேர்வு குறித்த தேதியை உறுதிப்படுத்த, சில அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இரு வேறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தேர்வர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
TRB வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்:
"தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வானது மாநில தகுதித் தேர்வான செட் தேர்வு முடிவுகள் வெளியான பின்புதான் நடைபெறும். செட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்னதாக இந்தப் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை. செட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் செட் தேர்வு முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஜூலையில் தேர்வு நடைபெறுமா என்ற கேள்விக்கு ஒரு வித தாமதத்தைக் குறிக்கிறது.
கல்லூரி கல்வி இயக்கக வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்:
"உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு தற்போது மிகவும் குறைவே. ஏனென்றால், TRB உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான ஆவணம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்துவதற்கான ஒரு சில அதிகாரிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இருந்தபோதிலும், அவர்களது முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. எனவே, தற்போது இந்தத் தேர்வு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவப் பேராசிரியர்கள் மூலமே இந்தாண்டும் பாடங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.
முரண்பட்ட தகவல்கள்
இந்த முரண்பட்ட தகவல்கள், TRB உதவிப் பேராசிரியர் தேர்வு குறித்த நிச்சயமற்ற தன்மையை உணர்த்துகின்றன. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதே சிறந்தது. அரசுத் தரப்பிலிருந்து தெளிவான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தேர்வர்கள் தங்கள் எதிர்கால திட்டங்களை வகுத்துக்கொள்ள உதவும்.