மாதம் ரூ.50,500 சம்பளம்.. காத்திருக்கும் மத்திய அரசின் பிஎஸ்என்எல் வேலைவாய்ப்பு
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) டெலிகாம் மற்றும் நிதிப் பிரிவுகளில் மொத்தம் 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கான தேர்வு செயல்முறை மற்றும் சம்பள விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்என்எல் வேலைவாய்ப்பு
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஒரு புகழ்பெற்ற மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனம். ரிலையன்ஸ், ஏர்டெல் போன்றவற்றுக்கு போட்டியாக சேவைகளை வழங்கி வருகிறது. சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கு BSNL தயாராகியுள்ளது. மொத்தம் 120 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் டெலிகாம் பிரிவில் 95, நிதிப் பிரிவில் 25 இடங்கள் உள்ளன. இந்த ஆட்சேர்ப்பில் SC, ST, OBC, PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு இடஒதுக்கீடு உண்டு. இது மத்திய அரசு விதிகளின்படி இருக்கும் என BSNL தெரிவித்துள்ளது. டெலிகாம் பிரிவில் சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிக்கு பி.டெக் அல்லது பி.இ. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் தேவை. எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவுகளில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். BSNL நிதிப் பிரிவில் சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிக்கு பட்டயக் கணக்காளர் (CA) அல்லது காஸ்ட் & மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்சி (CMA) முடித்தவர்கள் தகுதியானவர்கள்.
இன்ஜினீயர் வேலைகள்
குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
எழுத்துத் தேர்வு (கணினி அடிப்படையிலான தேர்வு) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தகுதி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இறுதித் தேர்வு நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை இருக்கும். இதர படிகளும் உண்டு.
விண்ணப்பம், தேர்வு தேதிகள் போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என BSNL தெரிவித்துள்ளது. சமீபத்திய தகவல்களுக்கு BSNL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.bsnl.co.in அல்லது www.externalexam.bsnl.co.in-ஐப் பார்க்கவும்.