மத்திய அரசு வேலைக்கு ரெடியா? 2026 காலண்டர் வந்துடுச்சு! மிஸ் பண்ணிடாதீங்க!
SSC Exam Calendar 2026-ஆம் ஆண்டிற்கான SSC தேர்வு கால அட்டவணை வெளியானது. CGL, CHSL, MTS மற்றும் கான்ஸ்டபிள் தேர்வுத் தேதிகளை இங்கே சரிபாருங்கள்.

SSC Exam Calendar
மத்திய அரசில் வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த முக்கிய அறிவிப்பு வந்துவிட்டது. பணியாளர் தேர்வாணையம் எனப்படும் எஸ்.எஸ்.சி (SSC), 2026-27 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேர்வு கால அட்டவணையை (Tentative Exam Calendar) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய தேர்வுகளுக்கான அறிவிப்பு எப்போது வரும், தேர்வு எப்போது நடக்கும் என்ற முழு விவரங்களும் தெரியவந்துள்ளன.
மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு 'குட் நியூஸ்'
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் SSC தேர்வுகளுக்காகத் தயாராகி வருகின்றனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (CGL), மேல்நிலைத் தேர்வு (CHSL), மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) மற்றும் ஜிடி கான்ஸ்டபிள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான தற்காலிக தேதிகள் தற்போது ssc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
முக்கிய தேர்வுகளும் அறிவிப்பு தேதிகளும்
வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, அதிகம் எதிர்பார்க்கப்படும் SSC CGL 2026 (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் 16, 2026 அன்று வெளியாகும் என்றும், தேர்வுகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2026-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், SSC CHSL 2026 தேர்வுக்கான அறிவிப்பு மே 19, 2026 அன்றும், MTS (Multi Tasking Staff) தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 21, 2026 அன்றும் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
கான்ஸ்டபிள் மற்றும் ஸ்டெனோகிராபர் தேர்வுகள்
பாதுகாப்புப் படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கான SSC GD Constable தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் 7, 2026 அன்று வெளியாகும். தேர்வுகள் ஜனவரி 2027-ல் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், ஸ்டெனோகிராபர் கிரேடு 'சி' மற்றும் 'டி' தேர்வுகளுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 2026-ல் வெளியாகும். ஜூனியர் இன்ஜினியர் (JE), சப்-இன்ஸ்பெக்டர் (SI) போன்ற தொழில்நுட்ப மற்றும் காவல்துறை சார்ந்த தேர்வுகளுக்கான தேதிகளும் இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.
கால அட்டவணையை டவுன்லோட் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் SSC-யின் அதிகாரப்பூர்வ இணையளமான ssc.gov.in-க்குச் சென்று 'Examination Calendar' என்ற பிரிவில் இந்த முழு அட்டவணையையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது ஒரு உத்தேச அட்டவணை என்பதால், நிர்வாகக் காரணங்களுக்காகத் தேதிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் அவ்வப்போது இணையதளத்தைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?
தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அரசு வேலை கனவை நனவாக்க விரும்பும் இளைஞர்கள் இப்போதே தங்கள் தயாரிப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே போதிய கால இடைவெளி இருப்பதால், சரியான திட்டமிடல் இருந்தால் 2026-ல் மத்திய அரசுப் பணியில் சேர்வது உறுதி என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.

