வந்தாச்சு SSC CHSL ஆன்சர் கீ! உடனே உங்க மார்க் என்னனு செக் பண்ணுங்க.. டைரக்ட் லிங்க் இதோ!
SSC CHSL SSC CHSL 2025 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியானது. ssc.gov.in தளத்தில் டவுன்லோட் செய்வது மற்றும் ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி? முழு விவரம்.

SSC CHSL விடைக்குறிப்பு வெளியீடு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி நிலை (CHSL) டயர் 1 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு (Tentative Answer Key) மற்றும் ரெஸ்பான்ஸ் ஷீட்டை (Response Sheet) வெளியிட்டுள்ளது. இத்தேர்வை எழுதிய லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள், இப்போது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in மூலம் தங்கள் விடைக்குறிப்பைப் பார்வையிடலாம்.
ஆட்சேபனை தெரிவிக்கக் காலக்கெடு
வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பதாகத் தேர்வர்கள் கருதினால், அதற்கு ஆட்சேபனை (Objection) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க டிசம்பர் 8 முதல் டிசம்பர் 11 மாலை 6 மணி வரை அவகாசம் உள்ளது. ஒவ்வொரு ஆட்சேபனைக்கும் ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும். டிசம்பர் 11 மாலை 6 மணிக்கு மேல் வரும் கோரிக்கைகள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது எனத் தேர்வாணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
விடைக்குறிப்பை டவுன்லோட் செய்வது எப்படி?
தேர்வர்கள் தங்கள் விடைக்குறிப்பை எளிதாகப் பதிவிறக்கம் செய்யக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
1. முதலில் ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் உள்ள ‘SSC CHSL Tier 1 Answer Key 2025’ என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
3. திரையில் தோன்றும் PDF கோப்பில் உள்ள லிங்க் மூலம் உங்கள் லாகின் விவரங்களை உள்ளிடவும்.
4. பின்னர் உங்கள் விடைக்குறிப்பு மற்றும் ரெஸ்பான்ஸ் ஷீட் திரையில் தோன்றும்.
5. அதை டவுன்லோட் செய்து, எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
இறுதி முடிவு எப்படி வெளியிடப்படும்?
ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடிந்த பிறகு, தேர்வர்கள் எழுப்பிய புகார்களைத் துறை சார்ந்த வல்லுநர்கள் ஆய்வு செய்வார்கள். ஆட்சேபனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில், திருத்தப்பட்ட இறுதி விடைக்குறிப்பு (Final Answer Key) வெளியிடப்படும். இந்த இறுதி விடைக்குறிப்பின் அடிப்படையிலேயே SSC CHSL டயர் 1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்வு மற்றும் காலிப்பணியிட விவரங்கள்
SSC CHSL தேர்வானது இந்த ஆண்டு நவம்பர் 12 முதல் 30 வரை, மொத்தம் 50 ஷிப்டுகளில் நடைபெற்றது. குரூப் C பிரிவில் உள்ள 3,131 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இத்தேர்வில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 30.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

