சென்னை பல்கலைக்கழகத்திற்கு 'மூடுவிழா'? 18 மாதங்களில் மாயமான ரூ.170 கோடி - பகீர் பின்னணி!
Madras University துணைவேந்தர் இல்லாத நிலையில் சென்னை பல்கலைக்கழக மூலதன நிதியில் ரூ.170 கோடி கரைந்தது. நிதி நெருக்கடியால் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி.

Madras University ஆபத்தான நிலையில் மூலதன நிதி
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை பல்கலைக்கழகம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பல்கலைக்கழகத்தின் உயிர்நாடியான மூலதன நிதியானது (Capital Fund) கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 346 கோடி ரூபாயாக இருந்த இந்த நிதி, தற்போது 176 கோடி ரூபாயாகச் சுருங்கியுள்ளது. துணைவேந்தர் இல்லாத இந்த காலகட்டத்தில், இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
மத்திய - மாநில அரசுகளின் மோதல் போக்கு
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிப்பது முதல் நிதி பெறுவது வரை, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் திட்டங்கள் குறைந்துள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவிலிருந்து (UGC) வரவேண்டிய நிதியில் 80 சதவீதம் நிலுவையில் உள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியமும் நிதிச்சுமையும்
கடந்த 10 ஆண்டுகளில் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 465 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க சுமார் 95.44 கோடி ரூபாய் தேவைப்பட்டது. இதற்கான நிதியைத் தமிழக அரசிடம் கேட்டும் கிடைக்காத நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது சொந்த நிதியிலிருந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக பல்கலைக்கழகத்தின் 'கார்பஸ் ஃபண்ட்' எனப்படும் மூலதன நிதியிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று வகை நிதிகளும்... விதிகளும்...
சென்னை பல்கலைக்கழகத்தில் மூலதன நிதி, பங்களிப்பு ஓய்வூதிய நிதி மற்றும் நினைவு இருக்கை நிதி என மூன்று முக்கிய நிதிகள் உள்ளன. இதில் 'மூலதன நிதி' என்பது விவசாயியின் விதைநெல் போன்றது; அதைச் செலவழிக்கக் கூடாது என்பது விதி. ஆனால், அவசரத் தேவைகளுக்காக இந்த நிதியிலிருந்து சுமார் 170 கோடி ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய நிதியிலிருந்து 73 கோடி ரூபாயும், அறிஞர்களின் பெயரில் உள்ள நினைவு இருக்கை நிதியிலிருந்து 2.50 கோடி ரூபாயும் செலவுக்காக எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக நீதிக்கு ஆபத்தா?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைப் போலவே, சென்னை பல்கலைக்கழகமும் நிதி நெருக்கடியால் முடங்கும் அபாயம் உள்ளதாகக் கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். மூலதன நிதி குறைந்துள்ளதால், வரும் காலங்களில் மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும், நிரந்தரப் பேராசிரியர்களுக்குப் பதில் தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இது ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவைச் சிதைக்கும் என்றும், இது தற்போதைய ஆட்சியின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

