- Home
- Career
- படிக்கிற பசங்களுக்கு மாசம் ரூ.5000! பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் உடனே அப்ளை பண்ணுங்க!
படிக்கிற பசங்களுக்கு மாசம் ரூ.5000! பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் உடனே அப்ளை பண்ணுங்க!
மத்திய அரசு 'பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்' இரண்டாம் கட்டத்தை ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்களுடன் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் 12 மாத பயிற்சி பெற்று, மாதந்தோறும் ₹5,000 உதவித்தொகை பெறலாம்.

பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்
மத்திய மோடி அரசு, நாட்டின் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 'பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்' (PM Internship Scheme 2026) இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில், தற்போது ஒரு லட்சத்திற்கும் மேலான புதிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முன்னணி 500 நிறுவனங்களில் இளைஞர்கள் நேரடியாகப் பணி அனுபவம் பெற முடியும்.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்
• நிதியுதவி: பயிற்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் ₹5,000 உதவித்தொகை வழங்கப்படும். (அரசு ₹4,500 + நிறுவனம் ₹500).
• கூடுதல் போனஸ்: பயிற்சி தொடங்கும்போது ஒருமுறை மட்டும் ஊக்கத்தொகையாக ₹6,000 வழங்கப்படும்.
• பயிற்சி காலம்: இது 12 மாதங்கள் கொண்ட முழுநேரப் பயிற்சியாகும். இதில் குறைந்தது 6 மாதங்கள் நேரடி வேலை அனுபவம் (Hands-on training) வழங்கப்படும்.
• துறைகள்: வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல், உற்பத்தி (Manufacturing), சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற 30-க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களில் பயிற்சி பெறலாம்.
விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
1. வயது வரம்பு: 21 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2. கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஐடிஐ (ITI), பாலிடெக்னிக் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு (BA, BSc, BCom, BCA, BBA, B.Pharma) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
1. முழுநேர வேலையில் இருப்பவர்கள் அல்லது முழுநேர படிப்பு படிப்பவர்கள் (ஆன்லைன்/தூரக்கல்வி படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்).
2. அரசு ஊழியர்களின் குடும்பத்தினர்.
3. IIT, IIM, IISER போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மற்றும் CA, MBA, MBBS போன்ற படிப்புகளை முடித்தவர்கள் இதற்குத் தகுதியற்றவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க 2026 மார்ச் 12 கடைசி தேதியாகும். ஒரு விண்ணப்பதாரர் தனது விருப்பத்திற்கேற்ப அதிகபட்சமாக 3 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
https://pminternship.mca.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
1. இணையதளத்திற்குச் சென்று 'Register Now' என்பதைக் கிளிக் செய்யவும்.
2. உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும்.
3. உங்கள் கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பித்து, உங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

