- Home
- Career
- இனி 'டுபாக்கூர்' வேலை நடக்காது! NEET, JEE தேர்வில் NTA-வின் அதிரடி மாற்றம் - மாணவர்களே உஷார்!
இனி 'டுபாக்கூர்' வேலை நடக்காது! NEET, JEE தேர்வில் NTA-வின் அதிரடி மாற்றம் - மாணவர்களே உஷார்!
NTA ஆள்மாறாட்டத்தைத் தடுக்க 2026 முதல் NEET, JEE தேர்வுகளில் ஆதார் மூலம் முகத்தை அடையாளம் காணும் முறை (Facial Recognition) அமல்படுத்தப்பட உள்ளது.

NTA தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முகத்தை அடையாளம் காணும் (Facial Recognition) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆள்மாறாட்டத்திற்கு முற்றுப்புள்ளி
NEET, JEE போன்ற உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய முறை கொண்டுவரப்படுகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் எழுந்த முறைகேடு புகார்களைத் தொடர்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எப்போது முதல் அமலுக்கு வருகிறது?
இந்த புதிய நடைமுறையானது 2026-ம் ஆண்டு முதல் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 2026-ல் நடைபெறவுள்ள ஜேஇஇ மெயின் (JEE Main Session 1) தேர்வில் இருந்தே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உண்மையான விண்ணப்பதாரர் தான் தேர்வெழுதுகிறார் என்பது உறுதி செய்யப்படும்.
ஆதார் கார்டு முக்கியம்
தேர்வர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க ஆதார் அட்டை பயன்படுத்தப்படும். விண்ணப்பதாரர்களின் பயோமெட்ரிக் தரவுகள் (கைரேகை அல்லது முகப் புகைப்படம்) ஆதார் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்படும். இதற்காக டெல்லியில் உள்ள சில தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது சோதனை முறையில் (Pilot Study) இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
விண்ணப்பிக்கும் போதே லைவ் போட்டோ
தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல், விண்ணப்பப் செயல்முறையிலும் NTA மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இனி விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அப்லோட் செய்வதற்குப் பதிலாக, வெப்கேம் அல்லது மொபைல் கேமரா மூலம் 'லைவ் போட்டோ' (Live Photograph) எடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்பவரும், தேர்வெழுத வருபவரும் ஒரே நபர்தானா என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கணினி வழித் தேர்வுகள்
ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு, அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக நடத்தப் பரிந்துரைத்துள்ளது. கணினி வழித் தேர்வு சாத்தியமில்லாத பகுதிகளில் 'ஹைபிரிட்' (Hybrid Mode) முறையைப் பின்பற்றவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகம் தற்போதுள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஆய்வு செய்து வருகிறது.

