நீட் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கட்-ஆஃப்-ல பெரிய மாற்றம்.. இனி ஈசியா சீட் கிடைக்கும்!
மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவின்படி, நீட் பிஜி 2025 தேர்வுக்கான தகுதி மதிப்பெண்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தால், SC/ST/OBC பிரிவினர் பூஜ்ஜிய பெர்சென்டைல் பெற்றிருந்தாலும் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

நீட் தேர்வு
மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான நீட் பிஜி (NEET-PG) 2025 நுழைவுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவின்படி, தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (NBEMS) இந்த ஆண்டிற்கான தகுதி மதிப்பெண்களைக் (Cut-off) குறைத்துள்ளது.
2025-26 கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில் (3rd Round Counselling) அதிகப்படியான மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றபட்ட கட்-ஆஃப் மதிப்பெண்கள்
புதிய அறிவிப்பின்படி, பல்வேறு பிரிவினருக்கான தகுதி சதவீத விவரங்கள் இதோ:
• பொதுப் பிரிவு (General/EWS): 15-வது பெர்சென்டைல் (முன்பு 50 ஆக இருந்தது).
• மாற்றுத்திறனாளிகள் (UR-PwBD): 10-வது பெர்சென்டைல்.
• SC/ST/OBC பிரிவினர்: 0 (பூஜ்ஜியம்) பெர்சென்டைல் (அதாவது தேர்வில் பங்கேற்ற தகுதியுள்ள அனைவரும் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்).
முக்கியமான நிபந்தனைகள்
1. ரேங்க் மாற்றம் இல்லை: கடந்த ஆகஸ்ட் 19, 2025 அன்று வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட ரேங்க் பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது.
2. ஆவணச் சரிபார்ப்பு: மாணவர்களின் MBBS அல்லது FMGE மதிப்பெண்கள், பயோமெட்ரிக் (Biometric) விவரங்கள் மற்றும் Face ID ஆகியவை சேர்க்கையின் போது மிகத் தீவிரமாகச் சரிபார்க்கப்படும்.
தவறான தகவல்
1. விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் தவறாக இருந்தால் அல்லது மதிப்பெண்களில் குளறுபடி இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவரின் விண்ணப்பம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
2. முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என NBEMS எச்சரித்துள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
கலந்தாய்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் (MCC) அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடிக்கடி சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், NBEMS உதவி எண்ணான 011-45593000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

