- Home
- Career
- கல்லூரி மாணவர்களே உஷார்! இனி இப்படித்தான் நடக்கும்.. கல்வி முறையில் வரும் மெகா மாற்றம் - முழு விவரம்!
கல்லூரி மாணவர்களே உஷார்! இனி இப்படித்தான் நடக்கும்.. கல்வி முறையில் வரும் மெகா மாற்றம் - முழு விவரம்!
UGC யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகளுக்கு மாற்றாக ஒரே உயர்கல்வி ஆணையம்! விக்ஸித் பாரத் கல்வி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். கல்வித்துறையில் மாபெரும் மாற்றம்.

UGC இந்திய உயர்கல்வியில் ஒரு புதிய அத்தியாயம்: யுஜிசி, ஏஐசிடிஇ இனி இல்லை?
பெரிய அளவிலான கல்விச் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. அவை அமைச்சரவை குறிப்புகள், வரைவு அறிக்கைகள் எனப் பல நிலைகளைக் கடந்தே வகுப்பறைகளையும் வளாகங்களையும் வந்தடைகின்றன. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 'விக்ஸித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா' (Viksit Bharat Shiksha Adhikshan Bill) இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகும்.
யுஜிசி, ஏஐசிடிஇ-க்கு விடைபெறும் நேரம்?
தேசியக் கல்ிக் கொள்கை 2020-ன் (NEP 2020) முக்கிய வாக்குறுதிக்குச் செயல் வடிவம் கொடுப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். இதன் மையக்கருத்து மிக எளிமையானது, ஆனால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதாவது, இனி இந்தியாவில் உயர்கல்வியை நிர்வகிக்கப் பல அமைப்புகள் இருக்காது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (NCTE) ஆகியவற்றுக்குப் பதிலாக, ஒரே ஒரு உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இருப்பினும், மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகள் இந்த புதிய அமைப்பின் வரம்பிற்குள் வராது.
அதிகாரங்கள் பிரிக்கப்படும் - புதிய கட்டமைப்பு என்ன?
முன்பு 'இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா' என்று அழைக்கப்பட்ட இது, தற்போது 'விக்ஸித் பாரத்' என்ற பெயருடன் மறுஅறிமுகம் செய்யப்படுகிறது. நிர்வாகத்தை எளிமையாக்குவது மற்றும் அதிகாரப் போட்டியைக் குறைப்பது இதன் இலக்கு. முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, முன்பு ஒரே அமைத்திடம் குவிந்திருந்த அதிகாரங்கள் இனி தனித்தனி பிரிவுகளாகப் (Verticals) பிரிக்கப்படும்.
• ஒழுங்குமுறை (Regulation)
• அங்கீகாரம் (Accreditation)
• கல்வித் தர நிர்ணயம் (Standard Setting)
• நிதி (Funding)
ஆகியவை வெவ்வேறு அமைப்புகளால் கையாளப்படும். குறிப்பாக, பொது நிதியை ஒதுக்கும் அதிகாரம் நிர்வாக அமைச்சகத்திடமே இருக்கும். நிதியை வழங்குபவரே தரத்தையும் நிர்ணயிப்பவராக இருக்கக்கூடாது என்ற முரண்பாட்டைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்று கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ஏன் இந்த ஒற்றை ஆணையம்?
ஒற்றை உயர்கல்வி ஆணையம் என்ற கருத்து புதியது அல்ல. 2018-லேயே இதற்கான வரைவு மசோதா வெளியிடப்பட்டது. ஆனால், தன்னாட்சி அதிகாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் அது கிடப்பில் போடப்பட்டது. தற்போது NEP 2020 மூலம் இது மீண்டும் உயிர்பெற்றுள்ளது. தற்போதைய சூழலில், கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது மிகவும் சிக்கலானதாகவும், பல்வேறு முரண்பாடான விதிகளையும் கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையற்ற தன்மையை மாற்றி, தரம் மற்றும் கற்றல் விளைவுகளில் கவனம் செலுத்துவதே இதன் நோக்கம்.
கல்வி நிறுவனங்களுக்கு என்ன லாபம்?
தற்போதைய அமைப்பில், ஒரே கல்வி நிறுவனம் பல அமைப்புகளின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிறது. புதிய மசோதா அமலுக்கு வந்தால், கல்வி நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் சுமை குறையும் என்று ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். "ஒரே சீரான தர நிர்ணயம் வரும்போது, பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சியில் புதுமைகளைப் புகுத்த அதிக சுதந்திரம் கிடைக்கும்," என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள். 'அனுமதி' வாங்குவதை விட 'தரத்தை' உயர்த்துவதில் போட்டி ஏற்படும் சூழல் உருவாகும்.
எழும் கேள்விகளும் சவால்களும்
இந்தச் சீர்திருத்தத்தின் வெற்றி, புதிய ஆணையம் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதில்தான் உள்ளது. இது அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்குமா? மாநில அரசுகளின் உரிமைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் என்னவாகும்? போன்ற கேள்விகள் 2018-ல் எழுப்பப்பட்டன; அவை இப்போதும் தொடர்கின்றன. மேலும், பழைய அமைப்புகளைக் கலைத்துவிட்டுப் புதிய அமைப்பை உருவாக்கும் இடைப்பட்ட காலத்தில், நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். வெறுமனே காகிதப் பணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது மட்டுமே தீர்வாகாது.
மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு என்ன மாற்றம்?
பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, அரசுடனான அணுகுமுறையில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் என்ற முறை மாறி, செயல்திறன் மற்றும் தரமதிப்பீடு என்ற முறை வரும். மாணவர்களுக்கு இதன் தாக்கம் உடனடியாகத் தெரியாது என்றாலும், நீண்ட காலத்தில் இது நன்மை பயக்கும். நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஒரே மாதிரியான தரத்தை எதிர்பார்க்கலாம்.
உயர்கல்வித் துறை
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு சட்டமாகும்போது, இந்திய உயர்கல்வித் துறை ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் என்பது மட்டும் உறுதி.

