- Home
- Career
- இன்டர்வியூ டிப்ஸ்: "பழைய வேலையை ஏன் விடுகிறீர்கள்?" என்று கேட்டால் இப்படி பதில் சொல்லுங்கள் - வேலை நிச்சயம்!
இன்டர்வியூ டிப்ஸ்: "பழைய வேலையை ஏன் விடுகிறீர்கள்?" என்று கேட்டால் இப்படி பதில் சொல்லுங்கள் - வேலை நிச்சயம்!
Interview நேர்காணலில் "ஏன் வேலையை மாற்றுகிறீர்கள்?" என்ற கேள்விக்குத் தயங்காமல், புத்திசாலித்தனமாகப் பதில் அளிப்பது எப்படி? பழைய பாஸ் பற்றிப் பேசலாமா? சம்பள உயர்வை எப்படிக் குறிப்பிடுவது? வேலை வாய்ப்பை உறுதி செய்யும் எளிய டிப்ஸ்.

Interview
வேலை தேடும் படலம் என்றாலே அதில் மிக முக்கியமான கட்டம் 'இன்டர்வியூ' (Interview). அதில் நம் திறமையை நிரூபிக்க எத்தனையோ தொழில்நுட்பக் கேள்விகள் கேட்கப்பட்டாலும், பலரும் திணறுவது ஒரே ஒரு கேள்வியில்தான். அது: "ஏன் உங்கள் பழைய வேலையை விட்டுவிட்டு வருகிறீர்கள்?" (Why are you leaving your current job?).
ராம் என்ற இளைஞர் இன்டர்வியூவுக்குச் செல்கிறார். எல்லா கேள்விகளுக்கும் பட்டையைக் கிளப்பும் ராம், இந்தக் கேள்வி வந்ததும் மட்டும் தடுமாறுகிறார். "சம்பளம் பத்தலனு சொல்லலாமா? இல்ல பாஸ் மேல இருக்கிற கோவத்தைச் சொல்லலாமா? ஒருவேளை அப்படிச் சொன்னா தப்பா நினைப்பாங்களோ?" என்ற குழப்பம் அவரை ஆட்கொள்கிறது.
இந்தத் தடுமாற்றம் உங்களுக்கும் இருக்கிறதா? கவலையை விடுங்கள். இந்தக் கேள்வியை உங்கள் வெற்றிக்கான வாய்ப்பாக மாற்றுவது எப்படி என்று நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் இதோ.
1. பழைய பாஸை திட்டாதீர்கள் (The Golden Rule)
இதுதான் முதல் விதி. உங்களுக்கு உங்கள் பழைய பாஸைப் பிடிக்காமல் இருக்கலாம், அல்லது அங்குள்ள சூழல் மோசமாக இருக்கலாம். ஆனால், அதை ஒருபோதும் புதிய இன்டர்வியூவில் கொட்டித் தீர்க்காதீர்கள்.
• ஏன்?: நீங்கள் பழைய நிறுவனத்தைப் பற்றித் தவறாகப் பேசினால், "நாளைக்கு நம் நிறுவனத்தை விட்டுச் செல்லும்போதும் இவர் இப்படித்தான் பேசுவார்" என்று அவர்கள் நினைப்பார்கள்.
• என்ன செய்ய வேண்டும்?: எதிர்மறையான விஷயங்களைத் தவிர்த்துவிட்டு, உங்களை எப்படி விற்பனை செய்வது (Market Yourself) என்பதில் கவனம் செலுத்துங்கள்.
2. திறமைகளை முன்னிறுத்துங்கள்
"ஏன் வேலையை விடுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு, "எனக்கு அங்கே பிடிக்கவில்லை" என்று சொல்வதை விட, "எனக்குத் தெரிந்த திறமைகளை அங்கே முழுமையாகப் பயன்படுத்த வாய்ப்பில்லை" என்று சொல்வது புத்திசாலித்தனம்.
• எடுத்துக்காட்டு: “நான் இன்னும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், என் திறமைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் விரும்புகிறேன். உங்கள் நிறுவனத்தில் அதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருதுகிறேன்.”
3. 'ரெட் பிளாக்' (Red Flag) காட்டாதீர்கள்
வேலை தேடும் பயிற்சியாளர் ஆஷ்லே வாட்கின்ஸ் கூறுவது இதுதான்: "பலரும் நேர்மையாக இருக்கிறேன் என்று சொல்லி, பழைய பாஸின் குறைகளை அடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், இன்டர்வியூ செய்பவர்கள் நீங்கள் எப்படிப்பட்ட நபர், பிரச்சனைகளை எப்படிக் கையாள்வீர்கள் என்பதைத்தான் கவனிப்பார்கள்."
• உங்கள் பழைய பாஸ் செய்தது தவறு என்றாலும், "நாங்கள் சில கொள்கை ரீதியான விஷயங்களில் மாறுபட்டோம்" என்று நாசூக்காகச் சொல்லி முடிப்பதே சிறந்தது.
4. கற்பனை செய்து பாருங்கள்
நீங்கள் பதில் சொல்லும்போது ஒரு சின்ன டெக்னிக்கைப் பயன்படுத்தலாம். உங்கள் பழைய பாஸ் அல்லது நீங்கள் யாரைப் பற்றிக் குறை சொல்ல நினைக்கிறீர்களோ, அவர்கள் உங்கள் பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
• அவர்கள் எதிரில் இருக்கும்போது உங்களால் எதைச் சொல்ல முடியாதோ, அதை இன்டர்வியூவிலும் சொல்லாதீர்கள். இது உங்களை வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்ளும்.
5. நிறுவனத்தின் வளர்ச்சியும் முக்கியம்
"எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்", "எனக்கு வளர்ச்சி வேண்டும்" என்று சுயநலமாக மட்டுமே பேச வேண்டாம்.
• நீங்கள் சேரப்போகும் புதிய நிறுவனத்திற்கு உங்களால் என்ன பயன் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்.
• "நீண்ட காலம் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்", "நிறுவனத்தின் லாபத்தில் என் பங்களிப்பைத் தர விரும்புகிறேன்" போன்ற வார்த்தைகள் நம்பிக்கையை விதைக்கும்.
சுருக்கமாகச் சொன்னால்...
பழைய கதையைத் தோண்டாதீர்கள்; புதிய பாதையைப் பற்றிப் பேசுங்கள். "ஏன் வந்தீர்கள்?" என்று கேட்டால், "சாதிக்க வந்தேன்" என்று உங்கள் பதிலில் உறுதி தெரியட்டும். வேலை நிச்சயம்!

