- Home
- Career
- Government Employees Promotion: 12 ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி? மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய புரொமோஷன் ரூல்ஸ்!
Government Employees Promotion: 12 ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி? மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய புரொமோஷன் ரூல்ஸ்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான தகுதியை 1 முதல் 4 ஆண்டுகளாக நிர்ணயிக்க FNPO கோரிக்கை வைத்துள்ளது. சில பதவி உயர்வுகளுக்கு 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலையில், இந்த பரிந்துரை ஏற்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FNPO வைத்த அதிரடி கோரிக்கை!
மத்திய அரசு ஊழியர்கள் தங்களது பணிக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, ஒரே பணிநிலையில் நீண்ட காலம் பணியாற்றுபவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் பதவி உயர்வு நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை 8வது சம்பளக் கமிஷனிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஃபெடரேஷன் ஆஃப் நேஷனல் போஸ்டல் ஆர்கனைசேஷன்ஸ் (FNPO) என்ற தபால் ஊழியர் கூட்டமைப்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான குறைந்தபட்ச தகுதிச் சேவையை 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பல ஆண்டுகளாக பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் ஊழியர்களுக்கு நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது.
8வது சம்பளக் கமிஷனிடம் FNPO வைத்த கோரிக்கை என்ன?
FNPO அமைப்பின் பொதுச் செயலாளர் சிவாஜி வாசுதே ரெட்டி, நவம்பர் 20, 2026 அன்று 8வது மத்திய சம்பளக் கமிஷன் தலைவர் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு இது தொடர்பாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், மத்திய அரசு துறைகளில் தற்போது நடைமுறையில் உள்ள பதவி உயர்வுக்கான தகுதிச் சேவை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு துறையிலும் பதவி உயர்வுக்கான காத்திருப்பு காலம் வெவ்வேறாக இருப்பதால் ஊழியர்களிடையே சமமற்ற நிலை உருவாகிறது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பதவி உயர்வுக்காக 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டுமா?
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையில், பல்வேறு ஊதிய நிலைகளுக்கு இடையிலான பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிச் சேவை விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, சில பதவி உயர்வுகளுக்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக:
பே லெவல் 2 முதல் லெவல் 4 வரை பதவி உயர்வு பெற 8 ஆண்டுகள் தகுதிச் சேவை தேவைப்படுகிறது.
லெவல் 4 முதல் லெவல் 6 வரை செல்ல 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
லெவல் 6 முதல் லெவல் 9 வரை செல்ல 8 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
லெவல் 6, 9 முதல் லெவல் 11 வரை செல்ல 12 ஆண்டுகள் வரை தேவைப்படுகிறது.
லெவல் 11 முதல் லெவல் 13 வரை செல்ல 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
இதே நேரத்தில், சில பதவி உயர்வுகளுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான தகுதிச் சேவையே போதுமானதாக உள்ளது. ஒரே அரசு நிர்வாக அமைப்பில் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய விஷயம் என்று FNPO தெரிவித்துள்ளது.
இனி 1 முதல் 4 ஆண்டுகளுக்குள் பதவி உயர்வு கிடைக்குமா?
FNPO முன்வைத்துள்ள முக்கியமான பரிந்துரை இதுதான். மத்திய அரசு துறைகளில் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிச் சேவை 1 ஆண்டாகவும், அதிகபட்ச தகுதிச் சேவை 4 ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.
ஆனால், அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதல்ல இந்தக் கோரிக்கையின் பொருள். ஒவ்வொரு பணியின் தன்மை, பொறுப்பு, அந்தந்தப் பிரிவின் பணியிட அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 1 முதல் 4 ஆண்டுகளுக்குள் தகுதிச் சேவை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே பரிந்துரை.
இதன் மூலம் பதவி உயர்வுக்கான காத்திருப்பு காலத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் என்பது ஊழியர் அமைப்பின் எதிர்பார்ப்பாகும்.
காலியாக உள்ள அரசு பணியிடங்களும் முக்கியப் பிரச்சினை!
பதவி உயர்வு தாமதமாவது ஊழியர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்லாமல், அரசு அலுவலகங்களின் செயல்பாட்டையும் பாதிப்பதாக FNPO சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, தபால் துறையில் லோயர் செலக்ஷன் கிரேடு (LSG), ஹையர் செலக்ஷன் கிரேடு (HSG), மேற்பார்வைப் பணியிடங்கள், சீனியர் சூப்பிரண்டு ஆஃப் போஸ்ட் ஆபீசஸ் மற்றும் குரூப் பி போன்ற நிலைகளில் பதவி உயர்வு வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தகுதியான ஊழியர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல முடியாதபோது, முக்கியப் பொறுப்புகளில் காலியிடங்கள் நீடிக்கின்றன. இதனால் ஏற்கெனவே பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அலுவலக நிர்வாகம், முடிவெடுக்கும் நடைமுறைகள், புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவது போன்ற பணிகளும் பாதிக்கப்படலாம்.
எல்லா மத்திய அரசு துறைகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள்!
தற்போது வெவ்வேறு துறைகளில் பதவி உயர்வுக்கான தகுதிச் சேவை விதிமுறைகள் மாறுபடுகின்றன. இதனால் ஒரே மாதிரியான பணிநிலைகளில் இருக்கும் ஊழியர்களுக்குக்கூட பதவி உயர்வு கிடைக்கும் காலத்தில் வித்தியாசம் ஏற்படலாம். இதனைச் சரிசெய்ய அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான பதவி உயர்வு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று FNPO கோரியுள்ளது.
அதே நேரத்தில், ஒவ்வொரு துறையின் பணித்தன்மை மற்றும் பணியிடப் பொறுப்புகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பதவி உயர்வு விதிகளில் அவ்வப்போது ஆய்வு தேவை!
பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகள் முறையாகச் செயல்படுகிறதா, தகுதியான ஊழியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா, காலியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கிறதா என்பதை அரசு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் FNPO பரிந்துரைத்துள்ளது.
இதன் மூலம் ஊழியர்களின் பணித்திறன், மனநிறைவு மற்றும் அரசு அலுவலகங்களின் நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8வது சம்பளக் கமிஷன் இதற்கு ஒப்புதல் அளிக்குமா?
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்படும் என்று எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. FNPO அமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கை மட்டுமே இது. 8வது சம்பளக் கமிஷன் இந்தப் பரிந்துரையை ஆய்வு செய்து தனது அறிக்கையில் சேர்க்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும். அதன் பிறகு மத்திய அரசு பரிந்துரைகளைப் பரிசீலித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும். எனவே, இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் பணிவாழ்க்கையில் முக்கியமான மாற்றம் ஏற்படலாம். குறிப்பாக, நீண்ட காலமாக ஒரே பதவியில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் மேம்படலாம். ஆனால், அரசு ஒப்புதல் அளிக்கும் வரை இதனை உறுதியான புதிய விதியாகக் கருத முடியாது.















