- Home
- Career
- மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக வேண்டுமா? CTET 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆக வேண்டுமா? CTET 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பது எப்படி?
CTET CTET பிப்ரவரி 2026 தேர்வுக்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வு தேதி: பிப்ரவரி 8, 2026. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 18. தகுதி, கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்கள் இங்கே.

CTET 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பது எப்படி?
ஆசிரியர் பணியை லட்சியமாகக் கொண்ட லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கிய அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 2026-ல் நடைபெறவுள்ள மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
கேந்திரிய வித்யாலயா (KVS), நவோதயா வித்யாலயா (NVS) போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சேர இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
தேர்வு தேதி மற்றும் விண்ணப்பக் காலக்கெடு
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, CTET தேர்வு பிப்ரவரி 8, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாடு முழுவதும் 136 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நவம்பர் 27 அன்றே தொடங்கிவிட்டது. ஆர்வமுள்ள தேர்வர்கள் டிசம்பர் 18, 2026 வரை ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தாள் 1 மற்றும் தாள் 2: யாருக்கு எந்தத் தேர்வு?
இந்தத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும்:
• தாள் 1 (Paper 1): 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர் ஆக விரும்புபவர்களுக்கானது.
• தாள் 2 (Paper 2): 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர் ஆக விரும்புபவர்களுக்கானது.
• இரண்டு நிலைகளிலும் பாடம் எடுக்க விரும்புபவர்கள் இரண்டு தாள்களையும் எழுதலாம்.
விண்ணப்பக் கட்டண விவரம்
• பொது மற்றும் ஒபிசி (General/OBC) பிரிவினர்:
o ஒரு தாள் மட்டும் எழுத: ரூ. 1,000
o இரண்டு தாள்களும் எழுத: ரூ. 1,200
• எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் (SC/ST/Diff. Abled):
o ஒரு தாள் மட்டும் எழுத: ரூ. 500
o இரண்டு தாள்களும் எழுத: ரூ. 600
வாழ்நாள் முழுவதும் செல்லும்!
முன்பெல்லாம் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது, ஒருமுறை CTET தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அந்தச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் (Lifetime Validity) செல்லும். அதேசமயம், மதிப்பெண்ணை உயர்த்த விரும்பினால் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிகாட்டி
1. முதலில் ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் உள்ள "Apply for CTET February 2026" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. 'New Registration' என்பதைத் தேர்வு செய்து அடிப்படை விவரங்களைப் பதிவு செய்யவும்.
4. விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
5. புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
6. உரிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
தனியார் பள்ளிகளிலும்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி, சண்டிகர், அந்தமான் நிக்கோபார், டெல்லி போன்ற யூனியன் பிரதேச பள்ளிகளிலும், சில தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் பணிக்கு இந்தச் சான்றிதழ் செல்லுபடியாகும்.

