சென்னையில் தொகுப்பூதியத்தில் வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
Assistant cum computer operator jobs : சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில், கணினி இயக்குபவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, 42 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்களோடு இணைந்து வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில் காலியாக உள்ள ஒரு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்) மற்றும் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 42 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. (பொது விண்ணப்பதாரர்களுக்கு) இப்பணியிடத்திற்கான தொகுப்பூதியமாக மாதம் ரூ.11,916/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்ப படிவத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பூர்த்தி செய்து 14.11.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 13, சாமி பிள்ளைத் தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை-600 112 என்ற முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.