ஆயிரம் 5 லட்சமாக மாறும்! ஆண்களுக்கு மட்டும் அஞ்சல் துறை வழங்கும் பொன்மகன் சேமிப்புத் திட்டம்!
தபால் துறையில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளுக்கு இருப்பதைப் போல பொன்மகன் சேமிப்பு திட்டம் (Ponmagan Scheme) ஆண் குழந்தைகளுக்கு அற்புதமான பலனைக் கொடுக்கும் சிறுசேமிப்புத் திட்டம் ஆகும்.
பெண் குழந்தைகளுக்காக தபால் துறை கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வெற்றியை அடுத்து, ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் கொண்டுவரப்பட்டது. 2015இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள பிரத்யேகத் திட்டம் ஆகும்.
பொன்மகன் திட்டத்தில் கணக்கு தொடங்க வயது வரம்பே கிடையாது. 10 வயதுக்கு உட்பட்ட சிறுவனாக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் சிறுவனின் சார்பாக கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 செலுத்தி கணக்கைத் திறக்க வேண்டும். தொடங்கியதும் 15 ஆண்டுகளுக்குக் கண்டிப்பாகப் பணம் செலுத்த வேண்டும்.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.500 இல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். பொன்மகன் சேமிப்புத் திட்டத்தின் தற்போதைய வட்டி 7.6%. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால், அதற்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க முடியும். அப்போதும் இந்தக் கணக்கில் பிபிஎஃப் வட்டியே கிடைக்கும். கணக்கு தொடங்கி 5 ஆண்டுகள் ஆனதும் தேவைப்ப்ட்டால் கணக்கை அத்துடன் முடித்துக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
இத்திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1,000 செலுத்தினால், ஆண்டு முதலீடு ரூ.12,000 ஆக இருக்கும். அதற்கு வட்டி 7.6 சதவீதம் கொடுக்கப்படும். இவ்வாறு 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் மொத்தத்தில் முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும்.
மாதம்தோறும் ரூ.5,000 முதலீடு செய்துவந்தால், ஆண்டுக்கு ரூ.60,000 முதலீடு. இவ்வாறு 15 ஆண்டுகள் தொடர்ந்தால் மொத்தமாக ரூ.9 லட்சம் முதலீட்டுக்கு முதிர்வுத் தொகையாக ரூ.27,34,888 கிடைக்கும். ரூ.10,000 வீதம் 15 வருடங்களுக்கு மாதம் தோறும் முதலீடு செய்துவந்தால், முடிவில் ரூ.54,69,773 முதிர்வுத் தொகை கிடைக்கும்.