தங்கத்தை வாங்க இது சரியான நேரமா? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த டைம்!
தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், அதன் எதிர்காலம் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். வரலாற்று ரீதியாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகியுள்ளது, சர்வதேச பொருளாதார காரணிகள் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள் தங்கத்தின் விலையை பாதிக்கலாம்.
Anand Srinivasan
இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது. இது காதுகுத்து, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தொடர்புடையதாக இருப்பதுடன், உறவினர்களுக்கு தங்க நகைகள் கொடுப்பது மரபாக மாறியுள்ளது. தங்கம் பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அலங்காரமாக அணிவதற்காக மட்டுமல்லாமல், அவசரத் தேவைகளுக்கு அடகு வைத்து உதவிக்குப் பயன்படுத்தவும் தங்கம் முக்கியமானதாக உள்ளது. தங்கம் ஒரு நல்ல முதலீடு பொருளாக இருப்பதாலேயே இவ்வளவு பரவலாகக் பயன்படுத்தப்படுகிறது.
Gold price Today
இந்த ஆண்டின் மார்ச் மாதத்திலிருந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி கொண்டே வருகிறது. முந்தைய காலங்களில் தங்கத்தின் விலையில் ரூ.10 முதல் ரூ.100 வரை மாற்றங்கள் ஏற்படும். ஆனால், சமீப காலங்களில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1000 முதல் ரூ.1500 வரை உயர்வதை காண முடிகிறது. இன்றைய தங்கத்தின் விலையை பொறுத்தவரை, சென்னையில் இன்று (அக்டோபர் 9) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 7,030 ஆக உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 56,240க்கு விற்பனையாகி வருகிறது. இன்றைய தினம், சவரன் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Can We Buy Gold Today
தங்கத்தின் விலை குறையுமா? அதிகரிக்குமா? தங்கத்தின் முதலீடு குறித்து பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் பேசியுள்ளார். இதுகுறித்து ஆனந்த் சீனிவாசன் பேசியதாவது, “தங்கத்தின் விலை தற்போது உச்சத்தில் இருப்பினும், அது என்றும் குறையாத நிலைத்தன்மை பெறும் என சொல்ல முடியாது. தங்கம் என்றுமே விழாது என்று யாரும் எண்ண வேண்டாம். 1980களில், நம்மால் கணிக்க முடியாத அளவுக்கு தங்கத்தின் விலை 300 அமெரிக்க டாலரிலிருந்து 80% குறைந்து, 20-30 டாலர்களுக்கு வர்த்தகமாகியது. அந்த நேரத்தில், அமெரிக்க மத்திய வங்கி கவர்னராக இருந்த பால் வோல்க்கர் வட்டி விகிதத்தை 20% உயர்த்தியதினால், தங்கத்தின் விலை ஒரு கணத்தில் 50% இற்கும் மேல் வீழ்ச்சியடைந்தது.
Gold Price Hike
அதேபோல், சமீப ஆண்டுகளில், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய போது, தங்கத்தின் விலை குறைந்தது. இதுவே தொடரும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத ஒரு மாற்றமாக, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தங்களின் மத்திய வங்கிகள் மூலம் தங்கத்தை அதிகமாக குவிக்கத் தொடங்கின. இதன் விளைவாக, அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்திய போதிலும், தங்கத்தின் விலை சரியவில்லை. இப்போது, அமெரிக்க பொருளாதாரம் நிலைபெற்று வருவதால், வட்டி விகிதத்தை மீண்டும் குறைப்பது குறித்து அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. வட்டி விகிதம் குறைவதோடு, தங்கத்தின் விலையும் உயர வாய்ப்பு அதிகரிக்கும்.
Anand Srinivasan on Investments
அதே சமயம், புவிசார் அரசியலில் ஏற்படும் மாற்றங்களையும் கணிக்க முடியாது. ரஷ்யா மற்றும் சீனா தங்களிடம் உள்ள தங்கத்தை விற்றால், தங்கத்தின் விலை குறையும். இருப்பினும், அவர்கள் அதை விற்கத் தொடங்குவார்களா என்றால், அதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது. ஆனாலும், சந்தையில் நடக்கும் எதுவும் கண்டிப்பாக வெளிப்படும், எனவே எதிர்பாராத நேரத்தில் தங்கத்தின் விலை குறையும் வாய்ப்பும் உள்ளது” என்று கூறியுள்ளார் ஆனந்த் சீனிவாசன்.
சிடிஎம் மெஷினில் பணம் போடுறதுக்கு இவ்வளவு கட்டணம் இருக்கா.. அய்யய்யோ தெரியாம போச்சே!