- Home
- Business
- Indian Currency: ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளில் இருக்கும் சிறிய கோடுகள்.. என்ன காரணம் தெரியுமா?
Indian Currency: ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளில் இருக்கும் சிறிய கோடுகள்.. என்ன காரணம் தெரியுமா?
Indian Currency: உங்க பர்ஸ்ல இருக்கும் ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளை இன்னொரு முறை எடுத்துப் பாருங்க. அதில் தினமும் கண்முன்னே இருக்கும் ஒரு சிறிய விஷயம், உண்மையில் ஒரு பெரிய சமூகப் பொறுப்பை கூறுகிறது என்றே சொல்லலாம்.

இந்திய ரூபாய் நோட்டுகள்
நாம் தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் பலரின் கவனத்திற்கே வராத சில அம்சங்கள் உள்ளன. மகாத்மா காந்தியின் படம், நோட்டு எண் அல்லது பாதுகாப்பு இழை போன்றவற்றை நாம் கவனித்திருப்போம். ஆனால், ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளின் ஓரங்களில் இருக்கும் சாய்வுக் கோடுகள் ஏன் வைக்கப்பட்டுள்ளன என்று யோசித்ததுண்டா? இந்த சிறிய குறியீடுகளுக்குப் பின்னால், பார்வையற்றோரின் வாழ்க்கையை எளிதாக்கும் பெரிய சமூக நோக்கம் மறைந்துள்ளது.
ப்ளீட் மார்க்ஸ் என்றால் என்ன?
நோட்டின் இடது மற்றும் வலது ஓரங்களில் காணப்படும் இந்த சாய்வுக் கோடுகள், "Bleed Marks" என்று அழைக்கப்படுகின்றன. இவை சாதாரண அச்சு வடிவமைப்பைப் போல சமமாக இருக்காது. சற்று உயர்வாக அச்சிடப்பட்டிருப்பதால், கைகளால் தொட்டு உணர முடியும். இதனால், பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் நோட்டின் மதிப்பை எளிதாக அடையாளம் காண முடிகிறது.
எந்த நோட்டில் எத்தனை கோடுகள்?
ரூ.100 நோட்டில் இருபுறமும் நான்கு சாய்வுக் கோடுகள் இடம்பெற்றுள்ளன. ரூ.200 நோட்டிலும் நான்கு கோடுகள் இருக்கும். ஆனால், அதனுடன் இரண்டு சிறிய வட்டக் குறியீடுகளும் சேர்க்கப்பட்டிருக்கும். ரூ.500 நோட்டில் இருபுறமும் ஐந்து சாய்வுக் கோடுகள் காணப்படுகின்றன. இந்த வித்தியாசங்களே நோட்டுகளை வேறுபடுத்த உதவுகின்றன.
வடிவக் குறியீடுகளும் உதவுகின்றன
Bleed marks மட்டுமல்லாமல், ஒவ்வொரு நோட்டிலும் தனித்துவமான வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. ரூ.100 நோட்டில் முக்கோணம், ரூ.200 நோட்டில் எச் வடிவம் மற்றும் ரூ.500 நோட்டில் வட்ட வடிவம் அச்சிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பார்வையற்றோருக்காகவே உள்ளன.
பாதுகாப்பும் சமூகப் பொறுப்பும் இணைந்த வடிவமைப்பு
நோட்டுகளில் காணப்படும் பாதுகாப்பு இழை, நிறம் மாறும் அம்சம் உள்ளிட்டவை போலி நோட்டுகளை கண்டறிய உதவுகின்றன. அதே நேரத்தில், bleed marks போன்ற அம்சங்கள் அனைவருக்கும் சமமான பயன்பாடு உறுதி செய்கின்றன. அடுத்த முறை ரூபாய் நோட்டை கையில் எடுக்கும் போது, அதன் பின்னால் இருக்கும் இந்த அற்புதமான சிந்தனையையும் சமூக அக்கறையையும் நினைவுகூர மறக்காதீர்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

