வீட்டுக் கடன் வாங்கத் தேவையான தகுதிகள் என்ன?
வீட்டுக் கடன் வாங்குவதற்கு மாத வருமானம், வயது, கிரெடிட் ஸ்கோர், டவுன் பேமெண்ட் போன்ற முக்கிய தகுதிகள் தேவை. கடன் வாங்குபவரின் வயது, வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவை கடன் தொகை மற்றும் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும்.
எந்தக்கடன் வாங்க வேண்டும் என்றாலும் அதன்கான சில Eligibility தேவை என்கின்றனர் வங்கி அதிகாரிகள். தனிநபர், வாகன கடன்களை விட வீட்டுக்கடன் வாங்குவதற்கு முக்கியமான சில தகுதிகள் தேவை என்பதே உண்மை. நிதி நிறுவனங்களோ, வங்கிகளோ கடன் கேட்டதும் உடனே கொடுக்க மாட்டார்கள். அதற்கான தகுதிகளும் சரியான ஆவணங்களும் இருக்கும் பட்சத்தில் நமக்கு கிடைத்து விடும் வீட்டுக்கடன்.
வீட்டுக் கடன் வாங்குபவர்களின் மாத வருமானம் மிக முக்கியமாக கவனிக்கப்படும். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்கள் என்றும் அடுத்த 10 ஆண்டுகளில் வருமானம் எவ்வளவு இருக்கும் எனவும் ஆதாரத்துடன் கூறிய பிறகே வீட்டுக்கடன் கிடைக்கும். அதனை பொருத்தே கடன் தொகை மற்றும் இ.எம்.ஐ அமையும். கடன் வாங்குபவரின் வருமானம் மாதத்திற்குக் குறைந்தபட்சம் ரூ.25,000 - 30,000 ஆக இருக்க வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
சம்பளம் அல்லது வருமானத்திற்கேற்ப தான் கடன் தொகை கிடைக்கும். அதனால், எக்ஸ்ட்ரா வருமானம் எதாவது இருந்தால், அதை கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் காட்டுவது நல்லது. இது உங்கள் மேல் உள்ள நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும்.
வீட்டுக் கடன் வாங்குபவர் கட்டாயம் நல்ல வருமானம் உள்ளவராக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் வயது 21 - 65-க்குள் இருக்க வேண்டியது கட்டாயம். வீட்டுக் கடனைப் பொறுத்த வரை, வயது என்பது மிக மிக முக்கியம். காரணம், வீட்டுக் கடன் வாங்குபவர் அடுத்த 20 - 30 ஆண்டுகளுக்கு கடனைக் கட்டியாக வேண்டும். அதனால், அவரது வயது மற்றும் கடன் தொகை முக்கியமாக கணக்கில் எடுக்கப்படும். 30 வயது முதல் 40 வயது வரை இருப்பவர்களுக்கு உடனடியாக வீட்டுக்கடன் கிடைத்துவிடும்.
தற்போது பலருக்கு சிக்கலை கொடுப்பது கிரெடிட் ஸ்கோர். வீட்டுக் கடனுக்கு முயற்சி செய்வதற்கு முன்பு, கிரெடிட் ஸ்கோரை கட்டாயம் செக் செய்ய வேண்டும். அது 700 - 750 புள்ளிகளுக்குள் இருந்தால் சிறப்பு. இதற்கு கீழ் இருக்கும் பட்சத்தில், கடன் கிடைப்பது கொஞ்சம் சிரமம். அப்படியே கிடைத்தாலும், வட்டித்தொகை அதிகமாக இருக்கலாம். எனவே கிரெடிட் ஸ்கோரை இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்க வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகுவதற்கு முன்பு, டவுன் பேமெண்டை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 சதவிகித தொகையை கையில் வைத்திருப்பதன் மூலம், உங்கள் கடன் தொகை குறையும். வங்கியும், நிதி நிறுவனமும் உடனடியாக கடன் கொடுக்க நல்ல வாய்ப்பாக அமையும்.
வேறு எதாவது கடன்கள் இருந்தால் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் அடைத்துவிடுங்கள். கடன் எதாவது இருக்கிறதா என்பதைக் கடன் கொடுப்பதற்கு முன்பு வங்கி அல்லது நிதி நிறுவனம் கவனிக்கும். கூடுதலாக, முன்னரே கடன்களை அடைப்பதன் மூலம், கடன் சுமையைக் குறைப்பது நல்லது. அதேபோல் வீட்டுக்கடன் வழங்கும் வங்கியிடம் தங்களுக்கு கடன் இருப்பதை தெளிவு படுத்துவது நல்லது.
வங்கி அல்லது நிதி நிறுவனம் குறிப்பிட்டுள்ள கண்டிஷன்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளதா என்பதை ஆராய்ந்து கடன் கேட்பது எளிதில் கடன் பெற வழிவகுக்கும்.வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் வீட்டில் சம்பாதிக்கும் இன்னொரு நபரின் பெயரும் விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள். இது வங்கியின் நம்பகத்தன்மைக்கு கூடுதல் வலு சேர்க்கும். அதேபோல் கூடுதல் சொத்துக்கள் மற்றும் செகண்ட் வருமானம் இருந்தால் கடன் வாங்கும் வங்கியிடம் தெரிவித்தால் நல்லது.