வங்கி லோன் மூலம் வீடு கட்டியவர்களில் 15% பேர் EMI கட்ட சிரமப்படுவதாகவும், சில்லறை பணவீக்கம் குறைந்ததால் வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. .

சொந்த வீடு என்ற சந்தோஷ கனவு

படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்த உடனேயே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே பலரது இலக்காக இருக்கிறது. காணி நிலமாக இருந்தாலும் அதில் ஒரு மாளிகை அமைத்து குடியேற வேண்டும் என மிடில் கிளாஸ் மக்களின் சிந்தனையில் இல்லாமல் இருந்தால் அது ஆச்சரியம். அவர்களின் ஆசையை அரசு மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் ஹோம் லோன்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த நிலையில் ஹோம் லோன்கள் பெற்றுள்ளவர்களுக்கும், பெறப்போகிறவர்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது.

காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி

நூறுபேர் சொந்த வீடு கட்டும் பட்டத்தில் அதில், 82 பேர் வங்கி லோன் பெற்றே வீட்டை கட்டுவதாக தனியார் கட்டுமான நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதில் 15 சதவீதம் பேர் இஎம்ஐயை தொடர்ந்து கட்டுவதற்கு சிரமப்படுவதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தால் இப்போது ஹோம் லோன் வட்டி குறையலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது ஹோம் லோன் எடுத்தோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

வீட்டுக்கடனும் வட்டி விகிதமும்

பெரும்பாலும் வீட்டுக்கடனை எடுக்கும் போது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ ரேட்டை பொறுத்து வட்டி மாறும் வகையிலேயே லோன் எடுத்திருப்போம். அதன்படி ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை உயர்த்தினால் நாம் செலுத்தும் ஹோம் லோன் வட்டியும் உயரும். அதேபோல ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் நாம் திரும்பச் செலுத்த வேண்டிய ஹோம் லோன் வட்டியும் குறையும். 2023 பிப்ரவரிக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் தான் ரெப்போ விகிதத்தை 6%ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

அதிரடியாக குறைந்த சில்லறை பணவீக்கம்

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 3.16% ஆகக் குறைந்துள்ளது. கொரோனா பரவலுக்குப் பிறகு, பணவீக்கம் இந்தளவுக்குக் குறைவது இதுவே முதல்முறையாகும். பொதுவாகவே பணவீக்கம் குறைந்தால் இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ ரேட்டை குறைக்கும். ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் நடக்கும் நிலையில், அதில் ரெப்போ ரேட் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை குறைந்தால் அனைத்து வங்கிகளும் தங்கள் கடன் விகிதங்களையும் குறைக்கும் எனவும் வீட்டுக் கடன் எடுத்தவர்கள் வங்கிக்குச் சென்று சந்தைக்குத் தகுந்தபடி வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொள்ளுமாறும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

குறையும் இஎம்ஐ - காத்திருக்கும் இனிப்பான செய்தி

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதால் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ள நிலையில், இதனால் வீட்டுக்கடன் இஎம்ஐ கூட குறைய வாய்ப்புள்ளது. அதிக இஎம்ஐ கட்டிவருவோருக்கு வரும் காலத்தில் இனிப்பான செய்தி காத்திருப்பதாகவே சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.