ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.300 சேமிப்பு.. மத்திய அரசின் புதிய பரிசு
மத்திய அரசு உஜ்வலா திட்டத்தின் கீழ் வீட்டு எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியத்தை 2025-26 வரை நீட்டித்துள்ளது. 9 சிலிண்டர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இதனால் கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

வீட்டு எரிவாயு சிலிண்டர்
மத்திய அரசு, பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் கீழ் வீட்டு எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியத்தை 2025-26 நிதியாண்டு வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 9 சிலிண்டர் ரீஃபில் வரை இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு விலை உயர்வில் நிவாரணம் கிடைக்கும். இந்த முடிவுக்காக அரசுக்கு சுமார் ரூ.12,000 கோடி செலவாகும் என்றும், எல்பிஜியை சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் அதிகரிப்பின் பின்னணி
இந்தியாவின் LPG தேவையின் சுமார் 60% இறக்குமதியிலிருந்து வருகிறது. 2022 மே மாதத்தில், உலக சந்தை விலை மாற்றங்கள் ஏழை குடும்பங்களை பாதிக்காமல் இருக்க, அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியம் வழங்கத் தொடங்கியது. அப்போது வருடத்திற்கு 12 ரீஃபில்களுக்கு இந்த சலுகை கிடைத்தது. இப்போது, அந்த ரூ.200 மானியம் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, ஆனால் உஜ்வலா பயனாளர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 9 ரீஃபில்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் சமையல் எரிவாயு விலை குறைந்து, தொடர்ந்து சிக்கனமான பயன்பாடு அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது.
எல்பிஜி பயன்பாட்டில் வளர்ச்சி
கடந்த சில ஆண்டுகளில் உஜ்வலா திட்ட பயனாளர்களிடையே LPG பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 2019-20ல் ஒருவருக்கு சராசரியாக 3 ரீஃபில்கள் இருந்தது, அது 2022-23ல் 3.68 ஆகவும், 2024-25ல் 4.47 ஆகவும் உயர்ந்தது. இதனால், எல்பிஜியை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து, புகையால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனைகள் குறைந்துள்ளன.
உஜ்வலா திட்டம்
பிரதம மந்திரி உஜ்வலா திட்டம் மே 2016ல் தொடங்கப்பட்டது. ஏழை குடும்பங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முன்பணம் இல்லாமல் LPG இணைப்புகளை வழங்குவதே இதன் நோக்கம். 2025 ஜூலை 1ஆம் தேதியளவில், நாடு முழுவதும் 10.33 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
9 ரீஃபில் சலுகை
இந்த திட்டத்தின் கீழ், சிலிண்டர், ரெகுலேட்டர், குழாய், DGCC புத்தகம் மற்றும் நிறுவும் செலவுகள் அனைத்தும் இலவசம். உஜ்வலா 2.0வில் முதல் ரீஃபிலும் அடுப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அனைத்து செலவுகளையும் அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதால், ஏழை குடும்பங்கள் எந்தப் பொருளாதாரச் சுமையும் இன்றி எல்.பி.ஜி பயன்படுத்தத் தொடங்க முடிகிறது.