ஆதார் PVC கார்டு ஆர்டர் பண்ண போறீங்களா.? இப்போ விலை உயர்ந்துடுச்சு.. முழு விபரம் உள்ளே
UIDAI நிறுவனம் ஆதார் PVC கார்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அச்சிடுதல் மற்றும் விநியோக செலவுகள் அதிகரித்ததே இதற்குக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் PVC கட்டணம் உயர்வு
ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. UIDAI நிறுவனம் ஆதார் PVC கார்டு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது ரூ.50 ஆக இருக்கும் கட்டணம், ரூ.75 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய கட்டணம் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஆதார் PVC கார்டு பலருக்கும் விருப்பமான அடையாள அட்டை வடிவமாக மாறியுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு கவனத்தை ஈர்க்கிறது. UIDAI விளக்கத்தின் படி, அச்சிடும் செலவு, மூலப்பொருட்கள், பாதுகாப்பான பிரிண்டிங் மற்றும் ஸ்பீட் போஸ்ட் டெலிவரி செலவுகள் அதிகரித்ததால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆதார் பிவிசி சேவை
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஆதார் PVC சேவை அறிமுகத்திலிருந்து சுமார் 5 ஆண்டுகளாக இந்த கட்டணம் மாற்றப்படாமல் இருந்தது. இப்போது தரமான தயாரிப்பு மற்றும் பாதுகாப்பான விநியோகத்தை தொடர்வதற்காக விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் PVC கார்டு என்பது ATM கார்டு போல வாலெட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய, நீடித்த பிளாஸ்டிக் அட்டை வடிவ ஆதாரம். இது காகித ஆதார் லெட்டரை விட உறுதியானது, தண்ணீரில் எளிதில் சேதமடையாது மற்றும் தினசரி பயன்பாட்டுக்கு வசதியாக உள்ளது. UIDAI கூறுவது போல, இந்த PVC கார்டுக்கும் ஆதார் கடிதம் அல்லது e-Aadhaar போலவே அதே சட்டபூர்வ செல்லுபடியாகும் மதிப்பு உள்ளது.
ஆதார் பிவிசி அம்சங்கள்
இந்த கார்டில் பாதுகாப்பு அம்சங்களும் பல உள்ளன. பாதுகாப்பான QR குறியீடு, ஹோலோகிராம், மைக்ரோடெக்ஸ்ட், ghost image போன்ற அம்சங்கள் போலி செய்வதை கடினமாக்குகின்றன. விண்ணப்பிப்பது மிகவும் எளிது. myAadhaar போர்டல் அல்லது mAadhaar ஆப் மூலம் ஆதார் எண் பதிவு செய்து OTP மூலம் வெரிஃபை செய்து ரூ.75 கட்டணம் செலுத்தினால் போதும். பொதுவாக 5 வேலை நாட்களில் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக, தனியார் கடைகளில் அச்சிடப்படும் PVC கார்டுகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல; UIDAI வழங்கும் கார்டுகளே செல்லுபடியாகும். தற்போது ஆதார் ஆதார் கடிதம், இ-ஆதார், ஆதார் பிவிசி என்ற 3 அதிகாரப்பூர்வ வடிவங்களில் கிடைக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

