பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்! திருப்பதி தரிசன டிக்கெட் இனி வாட்ஸ்அப்பில்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டுகளை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம். ஆந்திர அரசின் 'மன மித்ரா' திட்டத்தின் கீழ் இந்த சேவை வழங்கப்படுகிறது. விரைவில் பிற கோயில்களிலும் இந்த சேவை கிடைக்கும்.

பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்! திருப்பதி தரிசன டிக்கெட் இனி வாட்ஸ்அப்பில்!
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட டிக்கெட்டுகள் 3 மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டை மிகவும் எளிதாக பெற சூப்பர் திட்டத்தை கொண்டுள்ளது.
திருமலை திருப்பதி
அதாவது ஆந்திராவில் ‘மன மித்ரா’ என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம்.
இந்து அறநிலையத்துறை கோயில்கள்
இதேபோல் விஜயவாடாவில் உள்ள துர்காமல்லேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம், துவாரகா திருமலை போன்ற இந்து அறநிலையத்துறை கோயில்களின் சேவைகளை வாட்ஸ்அப்பில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ்அப் உதவி
தற்போது துர்காமல்லேஸ்வர சுவாமி கோயில் சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சேவைகளைப் பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் சேவைகளை தேர்ந்தெடுக்கவும். கோயில் முன்பதிவு சேவைகள், தரிசனங்கள், பூஜைகள், நன்கொடைகள் மற்றும் பிற சேவைகள் பற்றிய தகவல்களை சாட்பாட் மூலம் வழங்குகிறது. வழிமுறைகளை பின்பற்றி கட்டணம் செலுத்திய பிறகு டிக்கெட் உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும். இதன் மூலம் முன்பதிவு விவரங்களைப் பெறலாம்.
ரயில் டிக்கெட்டுகள்
அதேபோல் மத்திய அரசின் அனுமதியுடன், வாட்ஸ்அப்பின் நிர்வாக திட்டமான ‘மன மித்ரா’வில் ரயில் டிக்கெட்டுகளை சேர்க்க அரசு முயற்சிக்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஜனவரி 30ம் தேதி தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சேவைகள் மூலம் 2.64 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.