நீங்கள் வாங்கும் தங்கம் சுத்தமானதா? தங்கத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள்!!
தங்க அணிகலன்கள் தூய தங்கத்தில் செய்யப்படுவதில்லை. செம்பு, வெள்ளி போன்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. தங்கத்தின் தூய்மையை காரட் அளவீடு குறிக்கிறது.

How to check gold purity hallmark
உலகில் மதிப்பு மிக்க பொருள்களுள் ஒன்றான தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும் அதன் தரத்தில் குறைவிருக்காது.தங்கத்திலான அணிகலன்களைத் தனித்துச் செய்ய இயலாது. தங்கத்துடன், செம்பு, வெள்ளி உள்ளிட்ட சில உலோகங்களைச் சேர்த்தால் மட்டுமே அணிகலன்களைச் செய்ய முடியும். தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவைக் கொண்டு, தங்கத்தின் தனித்தன்மையும் மாற்றமடைகிறது. தங்கத்தின் தனித்தன்மையை, அதாவது அதன் தூய்மையை அளவிடும் அளவினை காரட் என்கின்றனர்.
இதுதான் 24 காரட் தங்கம்
99 புள்ளி 9 சதவிகிதம் எனும் அளவில் தூய்மையாக, மஞ்சள் நிறத்தில் ஒளிரக்கூடியதாக இருக்கும் தங்கம் 24 காரட் தங்கம் எனப்படும்.24 காரட் அளவிலான தங்கத்தில் முழுமையாக, 24 பங்கு தங்கம் இருக்கிறது. தங்கத்தில் 24 காரட் எனும் அளவிற்கு அதிகமான அளவீடு எதுவும் இல்லை.
சுத்தமான தங்கத்தில் அணிகலன் செய்ய முடியாதா?
தங்கத்தை மட்டும் பயன்படுத்தி உறுதியான அணிகலன்கள் செய்வது என்பது இயலாததால் தங்கத்துடன் செம்பு (தாமிரம்), வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்த்து அணிகலன்கள் செய்யப்படுகின்றன. தங்கத்துடன் பிற உலோகங்களைச் சேர்ப்பதால்தான் தங்கத்தின் கட்டமைப்பு வலுப்பெறுகிறது. இந்த வலு செய்யப்படும் அணிகலன்களை நீடித்து உழைக்கச் செய்கிறது.
22 காரட் என்றால் என்ன?
தங்கத்தின் தூய அளவான 24 பங்கு தங்கத்தில் 22 பங்கு தங்கத்தையும், 2 பங்கு பிற உலோகத்தையும் கொண்டிருந்தால் அந்த தங்கத்தினை 22 காரட் தங்கம் என்கின்றனர். அதாவது, 22 காரட் தங்கத்தில் 91.67 சதவிகிதம் தங்கம், மீதமுள்ள 8.33 சதவிகிதம் செம்பு (தாமிரம்), வெள்ளி, துத்தநாகம், நிக்கல் போன்ற உலோகக் கலவையிலானது.
25 சதவீதம் மற்ற உலோகம் கலப்பு
தங்கத்தின் முழுமையான தூய அளவான 24 பங்கு தங்கத்தில் 18 பங்கு தங்கத்தையும், 6 பங்கு பிற உலோகத்தையும் கொண்டிருந்தால் அத்தங்கத்தினை 18 காரட் தங்கம் என்று சொல்லலாம். அதாவது, 18 காரட் தங்கத்தில், 75 சதவிகிதம் தங்கம், மீதமுள்ள 25 சதவிகிதம் செம்பு (தாமிரம்), வெள்ளி, துத்தநாகம், நிக்கல் போன்ற உலோகக் கலவையிலானது. வைர நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பதிக்கப்பட்ட நகைகள் பெரும்பான்மையாக 18 காரட் தங்கத்திலேயேச் செய்யப்படுகின்றன. இந்த வகையான தங்கமானது 24 காரட் மற்றும் 22 காரட் தங்கத்துடன் ஒப்பிடும் போது விலை குறைவாக இருக்கும்.
தங்கத்தில் முத்திரை
18 காரட் அணிகலன்கள் என்பதை 18K, 18Kt, 18k எனும் குறியீடுகளாலோ அல்லது இதே போன்ற சில மாறுபாடுகள் கொண்ட குறியீடுகளால் முத்திரையிடப்பட்டிருப்பதைக் காணமுடியும். சில இடங்களில், அணிகலன்களில் 75 சதவீதம் மட்டுமே தங்கம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் நோக்கத்தில் 18 பங்கு தங்கம் மட்டுமே இதிலிருக்கிறது என்பதை அடையாளப்படுத்திட, அதன் சதவிகித அளவை 750, 0.75 எனும் எண் குறியீடுகளால் முத்திரையிடப்பட்டிருக்கும்
காரட் அளவும் தங்கத்தின் தூய்மையும்
24 காரட் – 100% தங்கம்
22 காரட் - 91.7% தங்கம்
18 காரட் - 75% தங்கம்
14 காரட் - 58.3% தங்கம்
12 காரட் - 50% தங்கம்
10 காரட் - 41.7% தங்கம்
தங்கத்தில் தூய்மையின் கணக்கு
பொதுவாகத் தங்கத்தின் தூய்மை அளவைக் கொண்டே தங்கத்தின் காரட் அளவீடுகள் செய்யப்படுகின்றன. 24 காரட் தங்கமானது 1000 தூய்மையில் 1000 பாகங்களாக அல்லது தூய்மை 1.000 ஆகக் கணக்கிடப்படுகிறது. தங்கத்தின் தூய்மை அளவைக் கணக்கிடத் தங்கத்தின் காரட் அளவை தங்கத்தின் முழு காரட் அளவான 24 ஆல் வகுத்து, அதைத் தங்கத்தின் முழுத் தூய்மை அளவான 1000 ஆல் பெருக்கிக் கிடைக்கும் அளவையேத் தங்கத்தின் தூய்மை அளவாகக் கொள்ளலாம்.
காரட் அளவும் தூய்மையும்
22 காரட் தங்கத்தின் தூய்மையினைக் கணக்கிட, 22 காரட் தங்கத்தினை 24 காரட் தங்கத்தால் வகுத்து, அதனைத் தங்கத்தின் முழுத் தூய்மை அளவால் பெருக்கினால் (22/24 x 1000 = 0.9166) எனும் 0.9166 அளவேத் தங்கத்தின் தூய்மை நிலையாகும். இதே போன்று, 21 காரட் என்பது 21 ஐ 24 ஆல் வகுத்து 1000 ஆல் பெருக்கினால் கிடைக்கும் 0.875 என்ற தங்கத்தின் தூய்மை நிலையாகும் இதனைப் போலவே 18 காரட்டுக்குக் கணக்கிட்டால் 0.750 என்ற தங்கத்தின் தூய்மை நிலை கிடைக்கிறது.
தங்கத்தின் நிறத்திற்கான காரணம்
தூய தங்கமான 24 காரட் தங்கம் இயற்கையான பொன் நிறத்தைப் பெற்றுள்ளது. அதன் தூய்மையை 24 காரட்டுக்குக் குறைவாக மாற்றாமல், அதன் நிறத்தை மாற்ற முடியாது. அணிகலன்களைச் செய்யும் போது, உலோகக் கலைவையை மாற்றுவதன் மூலம் தங்கத்தை பிற நிறங்களுக்கு மாற்ற முடிகிறது. உதாரணமாக, தங்கத்தின் உலோகக் கலவையில் அதிகமான செம்பு (தாமிரம்) சேர்க்கப்பட்டு இளஞ்சிவப்புத் தங்கம் தயாரிக்கப்படுகிறது. இதே போன்று, துத்தநாகம் மற்றும் வெள்ளி அதிகமாக சேர்க்கப்பட்டு பச்சை நிறத் தங்கமும், நிக்கல் அதிகமாகச் சேர்க்கப்பட்டு வெள்ளை நிறத் தங்கமும் தயாரிக்கப்படுகின்றன. மின்முலாம் பூசுவதன் மூலம் தங்கப் பொருட்களின் மேற்பரப்பிற்கு நிறம் கொடுக்கலாம். இருப்பினும், இது ஒரு மேற்பூச்சாகவே இருக்கும் என்பதுடன் இது காலப்போக்கில் தேய்ந்து போகும்.