- Home
- Business
- Toll Plaza: டோல்கேட்டில் இனி வண்டியை நிறுத்த தேவையில்லை.. தமிழ்நாட்டில் சூப்பர் சிஸ்டம் வந்தாச்சு!
Toll Plaza: டோல்கேட்டில் இனி வண்டியை நிறுத்த தேவையில்லை.. தமிழ்நாட்டில் சூப்பர் சிஸ்டம் வந்தாச்சு!
Toll Plaza: தமிழ்நாட்டில் முதன்முறையாக டோல்கேட்டில் 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிமேல் டோல்கேட்டில் வண்டியை நிறுத்த தேவையில்லை.

டோல்கேட்டில் இனி வண்டியை நிறுத்த தேவையில்லை
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிக்கும் முறையை விரைவுபடுத்துவதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (Multi-lane free flow) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாட்டில் முதன்முறையாக செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் நிற்காமலேயே ஃபாஸ்டேக் (FASTag) மூலமாக கட்டணம் செலுத்த முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயண நேரமும் மிச்சமாகும்.
மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ
இந்த புதிய 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' முறையின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்தாமல் தங்கள் வழியில் தொடர்ந்து பயணிக்கலாம். வாகனம் அந்த வழித்தடத்தில் செல்லும்போதே, தானியங்கு நம்பர் பிளேட் வாசிப்பு (ANPR) கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் அமைப்பு மூலம் டோல் கட்டணம் தானாகவே வசூலிக்கப்பட்டுவிடும். கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதுடன், ஃபாஸ்டேக் மூலமாக வாகன உரிமையாளரின் கணக்கிலிருந்து பணம் உடனடியாகப் பிடிக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் குறையும்
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அடிக்கடி பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தி இயக்கும் வேலை இல்லாததால், எரிபொருள் செலவும் குறைய வாய்ப்புள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறைவதால் காற்று மாசும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்படையான கட்டண வசூல்
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் மனிதர்களின் தலையீட்டை இந்த புதிய தொழில்நுட்பம் குறைக்கிறது. இதனால் டோல் வசூல் பணிகள் விரைவாக நடப்பதோடு, இந்த நடைமுறை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் துல்லியமாகவும் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிற நெடுஞ்சாலைகளிலும் பயன்பாடு
தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' முறை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் என்.எச்.-48 சூரத் - பரூச் வழித்தடத்தில் உள்ள சோர்யாசி சுங்கச்சாவடி, டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் யு.இ.ஆர்-II முண்ட்கா - பக்கர்வால் சுங்கச்சாவடி, ராஜஸ்தானில் டெல்லி-ஜெய்ப்பூர் என்.எச்.-48 வழித்தடத்தில் உள்ள ஷாஜஹான்பூர், தௌலத்பூர், மனோகர்பூர் சுங்கச்சாவடிகள் மற்றும் ஹரியானாவில் என்.எச்.-44 பானிபட் - ஜலந்தர் வழித்தடத்தில் உள்ள கரௌண்டா சுங்கச்சாவடிகளிலும் இந்த புதிய முறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.
ஃபாஸ்டேக்கில் இருக்க வேண்டிய இருப்புத் தொகை
இந்த 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களில் ஃபாஸ்டேக் கணக்கு ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும். மேலும், கணக்கில் தேவையான அளவு இருப்புத் தொகையையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கும் அல்லது சரியாகச் செயல்படாத ஃபாஸ்டேக் கணக்கு வைத்துள்ள வாகனங்களுக்கும் மின்னணு அபராத நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது.
எனவே, நெடுஞ்சாலைப் பயணத்திற்கு முன்பு ஃபாஸ்டேக் சரியாகச் செயல்படுகிறதா என்பதையும், போதுமான இருப்புத் தொகை உள்ளதா என்பதையும் பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். சுங்கச்சாவடிகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவை இந்த புதிய தொழில்நுட்பம் குறைக்கும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல நெடுஞ்சாலைகளுக்கு விரிவாக்கம்
நாட்டில் உள்ள மற்ற தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இந்த 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' முறையை படிப்படியாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து, பயணிகளுக்கு எளிமையான மற்றும் விரைவான நெடுஞ்சாலைப் பயணத்தை வழங்குவதே இத்திதட்தின் முக்கிய நோக்கமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

