ஒரே நாளில் 900 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! ஐடி துறையில் அமோக வளர்ச்சி!
Stock market today: வியாழக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்ந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு குறித்த அறிவிப்பு மற்றும் ஐடி துறையின் வளர்ச்சியால் சந்தை ஏற்றம் கண்டது.

Stock market today
வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி50 ஆகியவை வெகுவாக உயர்ந்தன. சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 1,000 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி50 23,200 புள்ளிகளைத் தாண்டியது.
பிஎஸ்இ சென்செக்ஸ் நாள் முடிவில் 899 புள்ளிகள் அல்லது 1.19% உயர்ந்து 76,348.06 இல் முடிந்தது. நிஃப்டி50 258 புள்ளிகள் அல்லது 1.13% உயர்ந்து 23,165.80 இல் முடிந்தது. அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் இந்திய பங்குச் சந்தையிலும் பிரதிபலித்துள்ளது.
Stock market update
நிஃப்டி50, சென்செக்ஸ் ஆகிய இரண்டு குறியீடுகளிலும் வங்கி மற்றும் ஐடி துறைகள் தொடர்ந்து நான்காவது நாளாக மேல்நோக்கிய பாதையில் சென்றுள்ளன. இந்தியா உள்பட உலகளாவிய பங்குச் சந்தைகள், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கொள்கை முடிவு காரணமாக சாதகமான விளைவைக் கண்டுள்ளன.
பெடரல் ரிசர்வ் வங்கி 2025 இல் இரண்டு முறை வட்டி விகிதக் குறைப்புக்குத் தயாராக இருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் பணவீக்கம் குறித்த நேர்மறையான கருத்தும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
US Federal Reserve
பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு:
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தற்போதைய வட்டி விகிதங்களை அப்படியே, தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் வரும் இரண்டு முறை வட்டி விகிதக் குறைப்புகள் இருக்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி விதிப்புகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, பெடரல் ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி கணிப்புகளைக் குறைத்துள்ளது.
பல்வேறு நாடுகள் மீது டிரம்ப் அறிவித்த வரிகள் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அதிகாரிகள் பணவீக்கம் மற்றும் பொருளாதாரக் குறியீனுகள் பற்றி மதிப்பிட்டு வருகின்றனர்.
IT companies
ஐ.டி. துறையின் வளர்ச்சி:
2025ஆம் ஆண்டில் 16.4% சரிவைத் தொடர்ந்து, நிஃப்டி ஐடி குறியீடு இன்று 2% முன்னேறியுள்ளது. முக்கிய ஐடி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை அடைந்துள்ளன. எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகியவை சுமார் 2% முன்னேற்றம் கண்டன. இந்த நிறுவனங்கள் கூட்டாக சென்செக்ஸின் முன்னேற்றத்தில் சுமார் 200 புள்ளிகள் பங்களித்துள்ளன.
வியாழக்கிழமை ஆசிய சந்தைகளுடன் இணைந்து, அமெரிக்கச் சந்தையிலும் வளர்ச்சி காணப்பட்டதால், இந்தியப் பங்குச்சந்தையும் ஏறுமுகமாக இருந்தது. அமெரிக்க டாலர் குறியீடு 103.36 ஐப் பதிவு செய்தது. இதுவும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குகள் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டுகள் அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.