இன்னும் 2,000 ரூபாய் நோட்டு இருக்கா? கவலைப்படாதீங்க.. மாற்றுவதற்கு இன்னும் வழி இருக்கு!
ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. இந்த நோட்டுகள் இன்னும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என்றாலும், வங்கிகளில் மாற்றும் வசதி முடிந்துவிட்டது. தற்போது ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

2000 ரூபாய் நோட்டு
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம், தனது "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" (Clean Note Policy) கீழ் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தற்போது 98 சதவீதத்திற்கும் அதிகமான நோட்டுகள் வங்கிக்குத் திரும்பிவிட்ட நிலையில், இன்னும் 5,669 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மக்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.
இன்னும் செல்லுபடியாகுமா?
2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் சட்டப்பூர்வமாகச் செல்லும் (Legal Tender). அதாவது, இந்த நோட்டுகள் செல்லாதவை அல்ல. ஆனால், சாதாரண வங்கிக் கிளைகளில் இவற்றை மாற்றும் வசதி 2023 அக்டோபரிலேயே முடிந்துவிட்டது. எனவே, இவற்றை அன்றாடப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது இப்போது கடினமாகியுள்ளது.
எங்கே மாற்றுவது?
உங்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அவற்றை நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி (RBI) அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இதற்கான வசதி உள்ளது.
நேரடியாக மாற்ற: ஒரு நேரத்தில் 20,000 ரூபாய் வரை மற்ற நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.
டெபாசிட் செய்ய: உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் வழங்கலாம்.
தபால் மூலம் அனுப்பும் வசதி
ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் தங்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கலாம். உரிய அடையாள ஆவணங்களுடன் அனுப்பப்படும் இந்த நோட்டுகள், பரிசோதனைக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
பணத் தட்டுப்பாடு நீங்கிய காரணத்தால் 2018-19 நிதியாண்டிலேயே இந்த நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

