Sovereign Gold Bond: தங்கப் பத்திரத் திட்டம் இன்று ஆரம்பம்! தங்கத்தில் முதலீடு செய்ய பொன்னான வாய்ப்பு!
தங்கத்தில் முதலீடு செய்ய ஒரு பொன்னான வாய்ப்பைத் தருவது தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond Scheme). மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் இன்று (மார்ச் 6) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) வரை விற்கப்படுகின்றன.
தங்கப் பத்திரத் திட்டம் என்றால் என்ன?
தங்கப் பத்திரத் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமாகும். தங்கக் கட்டிகள், நாணயங்கள், நகைகள் போன்றவற்றில் முதலீடு செய்வதற்குப் பதிலாக உள்ள மாற்று வழி ஆகும். 2015ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு முதலில் தங்கப் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது தங்கத்தின் தேவையைக் குறைத்து, தங்கத்தில் செய்யப்படும் முதலீட்டை நிதிச் சேமிப்பாக மாற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தத் தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது.
4வது தங்கப் பத்திரத் திட்டம்
இந்த ஆண்டுக்கான தங்கப் பத்திர விற்பனை இன்று தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வாய்பைப் பயன்படுத்தி குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம். நான்காவது முறையாக தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond Scheme 2022-23-Series IV) மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
தங்கப் பத்திரத்தின் விலை எவ்வளவு?
இத்திட்டத்தின் கீழ் மார்ச் 6 முதல் 10ஆம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் கிராமுக்கு ரூ.5,611 விலையில் விற்படை செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் ஆன்லைன் மூலம் தங்கப் பத்திரத்தை வாங்கினால் சிறப்புத் தள்ளுபடி கிடைக்கும் என்பது மற்றுமொரு சிறப்பு அம்சம் ஆகும்.
தங்கப் பத்திரத்துக்கு ஆன்லைன் சலுகை
தங்கப் பத்திரத் திட்டத்திற்கு ஆன்லைனில் பணம் செலுத்துபோது, ரூ.500 சலுகை கொடுக்கப்படுகிறது. அதாவது ஆன்லைன் வழியில் பணம் செலுத்தி தங்கப் பத்திரத்தை வாங்கினால் ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும். இவ்வாறு 10 கிராம் தங்கப் பத்திரம் வாங்கினால் ரூ.500 தள்ளுபடி பெறலாம்.
தங்கப் பத்திரங்களை எங்கே வாங்குவது?
தங்கப் பத்திரம் இந்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகிறது. இந்திய குடிமக்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே தங்கப் பத்திரத் திட்டம் வழங்கப்படும். இந்தப் பத்திரங்கள் வணிக வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் அலுவலகம், என்எஸ்இ, பிஎஸ்இ ஆகியவை மூலம் விற்கப்படுகின்றன.
தங்கப் பத்திரங்களுக்கு வட்டி
இப்போது வெளியிடப்படும் தங்கப் பத்திரத்தின் முதிர்வுக் காலம் 8 ஆண்டுகள் ஆகும். வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுகூட திரும்பப் பெறலாம். ஆண்டுதோறும் 2.5 சதவீதம் வட்டியும் கிடைக்கும் என்பது இந்தப் பத்திரத்தின் மூலம் கிடைக்கும் மற்றொரு பலன் ஆகும்.