ட்ரெண்ட்டை மாற்றும் விவசாய நில முதலீடு! கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
சமீப காலமாக விவசாய நிலங்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு விவசாய நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஒரு காரணம். இதுபோன்ற முதலீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ரியல் எஸ்டேட் முதலீடு
ரியல் எஸ்டேட் துறையில் முதன்மையான முதலீட்டு வாய்ப்புகளை குடியிருப்பு, வணிகச் சொத்துக்கள் என இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தலாம். குடியிருப்பு சொத்துக்களில் பிளாட்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் வணிகச் சொத்துக்களில் அலுவலக இடங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
விவசாய நிலத்தில் முதலீடு
ஏற்கனவே சொந்த வீடு இருப்பவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடக்கூடும். அவர்களுடைய பட்ஜெட் கணிசமானதாக இருந்தால், வணிகச் சொத்துக்களையே வாங்கலாம். ஆனால், சமீப ஆண்டுகளில் விவசாய நிலங்களை வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது. நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஒரு காரணம். முக்கிய நகரங்களில், விவசாய நிலங்கள் மற்றும் அத்தகைய நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் பொதுவாக பண்ணை வீடுகளாகவே காணப்படுகின்றன.
எனவே, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கிடைக்கும் விவசாய நிலத்தை முதலீட்டு வாய்ப்பாகக் கருதலாம். இதுபோல விவசாய நிலத்தைத் தேர்வு செய்து முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த முதலீடில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
வில்லங்கம் இல்லாத சொத்து
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கான முதல் விதி, உரிமை தொடர்பாக எந்தவிதமான சர்ச்சையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுதான். வாங்க நினைக்கும் விவசாய நிலம் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டதாக பூர்வீகச் சொத்தாக இருக்கலாம். பொதுவாக, கிராமப்புறங்களில் உயில்கள் உருவாக்கப்படுவதில்லை. சொத்து ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு தானாகவே மாறிவிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சொத்தின் உண்மையான உரிமையாளர் பற்றிய தகவலை தாலுகா அலுவலகத்தில் இருந்து பெறலாம். உள்ளூர் வழக்கறிஞரின் உதவியையும் நாடலாம்.
கூடுதலாக, எதிர்காலத்தில் வேறு யாரும் நிலத்தின் மீது உரிமைகோருவதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நிலத்தை நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என்றும், இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தொடர்புகொள்ளுமாறும் உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யலாம். முன்பணம் செலுத்தியவுடன், தாமதம் செய்யாமல் விரைவாக சொத்தை உங்கள் பெயரில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பண்ணை வீடு
ஒரு சிறிய வீடு கட்டும் நோக்கத்துடன் விவசாய நிலத்தை வாங்கத் திட்டமிட்டால், அந்த நிலத்தில் ஏதேனும் கட்டுமானம் அமைவதற்கு அனுமதி உள்ளதா என்பதை முன்கூட்டியே தாலுகா அலுவலகங்களில் சரிபார்க்க வேண்டியது அவசியம். சில இடங்களில், தற்காலிக அல்லது நிரந்தரமற்ற கட்டமைப்புகளுக்கு மட்டுமே அனுமதி இருக்கும்.
கட்டுமானம் அனுமதிக்கப்படும் விவசாய நிலத்தை வாங்கினால், ஹோட்டலோ, மண்டபமோ கட்டலாம். வணிக பயன்பாட்டிற்கும் பயன்ன்படுத்தலாம். இது காலப்போக்கில் நிலத்தின் மூலதன மதிப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வணிக பயன்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க மாத வருமானத்தையும் வழங்கும்.
சுற்றுலா
நகர்ப்புற வாழ்க்கையின் பரபரப்புகளிலிருந்து விலகி, கிராமப்புற சூழலில் சிறிது நேரம் செலவிடும் போக்கு நகரவாசிகளிடையே அதிகரித்து வருகிறது. விவசாய நிலத்தை வாங்கி சுற்றுலாத் தலம் போல பயன்படுத்தலாம். விவசாயம் அல்லது வீட்டுத் தோட்டம் போன்றவற்றை முயற்சி செய்யலாம். இதுபோன்ற கிராமப்புற சூழலில் விடுமுறை நாட்களைச் செலவிடும் இனிய அனுபவத்தைக் கொடுக்கும்.
சுற்றுலா
விவசாய நிலத்தில் முதலீடு செய்வது என்பது பாரம்பரியமான விவசாயத்தில் ஈடுபடுவதற்கு மட்டும் பயன்படக்கூடியது இல்லை. அந்த நிலத்தில் பூ, பழம் போன்றவற்றைப் பயிரிடலாம். சாமந்தி மற்றும் ரோஜா போன்ற மலர்களுக்கு ஆண்டு முழுவதும் தேவை உள்ளது. பண்டிகைக் காலங்களில் இன்னும் அதிக தேவை ஏற்படும். துளசி, கற்றாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்ப்பதன் மூலமும் நல்ல வருமானம் ஈட்டலாம். வாழை மற்றும் பப்பாளி போன்ற பழ மரங்களை நடவு செய்வது ஒப்பீட்டளவில் எளிதானது. நல்ல வருமானத்தையும் கொடுக்கும்.
வரி விலக்கு
விவசாய நிலத்தில் முதலீடு செய்வதன் ஒரு சுவாரஸ்யமான அம்சம் வரிச் சலுகைகள். விவசாய நடவடிக்கைகளில் கிடைக்கும் வருமானம் மற்றும் விவசாய நிலங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றுக்கு பொதுவாக வரிவிலக்கு கிடைக்கும். இது விவசாய நிலத்தில் முதலீடு செய்வதை மேலும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
லாபம் கொடுக்கும் முதலீடு
பாரம்பரியமாக, உயர்-நடுத்தர அல்லது நடுத்தர வர்க்கத்தினர் தங்களுடைய முதலீடுகளை பிக்ஸட் டெபாசிட், பங்குச்சந்தை, தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். அல்லது ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பிளாட்டுகள் மற்றும் வீடுபகளில் முதலீடு செய்வார்லகள். ஆனால், நீண்ட கால நோக்கில் லாபம் கொடுக்கும் முதலீடுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு விவசாய நிலம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.