- Home
- Business
- அரசு வேலையும் உறுதி... வாழ்க்கை துணையும் ரெடி: இளைஞர்களுக்கு பிரத்யேக டேட்டிங் ஆப் தொடங்கிய சிங்கப்பூர்!
அரசு வேலையும் உறுதி... வாழ்க்கை துணையும் ரெடி: இளைஞர்களுக்கு பிரத்யேக டேட்டிங் ஆப் தொடங்கிய சிங்கப்பூர்!
அரசு ஊழியர்களுக்கு வரன் பார்த்துத் திருமணம் செய்து வைக்க ‘FirstDate’ என்ற பிரத்யேக மேட்ச்மேக்கிங் தளத்தை சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஆண்டுக்கு 30,000 பிறப்புகள் கூட இல்லாத தீவிர நெருக்கடியைச் சந்திக்கும் நிலையில் நடவடிக்கை.

சிங்கப்பூர் FirstDate மேட்ச்மேக்கிங் ஆப்
ஒரு நாட்டின் அரசு மக்களுக்குப் பாதுகாப்பு தரலாம், உள்கட்டமைப்பை உருவாக்கலாம்... ஆனால் அரசு ஊழியர்களுக்கு திருமண வரன் தேடித் தரும் வேலையையும் அரசாங்கமே கையில் எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு விநோதமான, அதேசமயம் தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டத்தைத் தான் சிங்கப்பூர் அரசு தற்போது களத்தில் இறக்கியுள்ளது. சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதலபாதாளத்திற்குச் சரிந்து வரும் நிலையில், அதற்குத் தீர்வுகாண அரசு ஊழியர்களுக்கென பிரத்யேகமாக ‘ஃபர்ஸ்ட் டேட்’ என்ற மேட்ச்மேக்கிங் தளத்தை அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு?
இந்தத் தளம் அனைவருக்கும் பொதுவானது அல்ல; 21 வயது முதல் 35 வயது வரை உள்ள சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி. இளைஞர்களைத் திருமண பந்தத்தில் இணைத்து, அதன்மூலம் நாட்டின் குடும்ப கட்டமைப்பை வலுப்படுத்துவதே இதன் பிரதான இலக்கு.
காதலுக்கு கைகொடுக்கும் நோபல் பரிசு ஃபார்முலா!
வழக்கமான வணிகரீதியான டேட்டிங் செயலிகள் போல வெறும் சுயவிவரப் படங்களை (Profile Pictures) மட்டும் பார்த்து 'ஸ்வைப்' செய்யும் முறை இதில் கிடையாது. மாறாக, உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற ‘கேல்-ஷாப்லி ஸ்டேபிள் மேரேஜ்’ (Gale-Shapley Stable Marriage) என்ற துல்லியமான கணித அல்காரிதத்தை இந்தத் தளம் பயன்படுத்துகிறது.
பதிவு செய்யும் ஊழியர்கள் தங்களின் சிங்கப்பூர் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை (Singpass) மூலம் மட்டுமே விவரங்களை உறுதி செய்ய முடியும்; இதனால் போலி கணக்குகளுக்கு இடமில்லை. இருவரின் பழக்கவழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், வாழ்க்கைக் கொள்கைகள் ஆகியவற்றை நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்து இணையைக் கண்டறிகிறது. பலருடன் ஒரே நேரத்தில் அரட்டையடித்துக் குழப்பமடையாமல், ஒரு குறிப்பிட்ட சுழற்சிக்கு ஒருவருக்கு ஒரு பொருத்தமான இணையை மட்டுமே இந்த அல்காரிதம் பரிந்துரைக்கும்.
ஆதரவும்... புகையும் சர்ச்சையும்!
அரசின் இந்த ஹைடெக் வரன் தேடும் முயற்சிக்கு இளைஞர்களிடையே ஒருபுறம் உற்சாக வரவேற்பு கிடைத்தாலும், இன்னொருபுறம் கடுமையான விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. இப்படி ஒரு நல்ல திட்டத்தை ஏன் அரசு ஊழியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த வேண்டும்? தனியார் துறையினருக்கு இது கிடைக்காதா? அதென்ன 21 முதல் 35 வயது என்ற கட்டுப்பாடு? எனப் பொதுமக்களிடையே முணுமுணுப்புகளும் கேள்விகளும் எழுந்துள்ளன.
ஏன் இந்த அவசரம்? பின்னணி என்ன?
சிங்கப்பூரின் இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் இருப்பது ஒரு தீவிர மக்கள்தொகை நெருக்கடி. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத பெரும் வீழ்ச்சியாக, 2025-ஆம் ஆண்டில் அந்நாட்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை முதல்முறையாக 30,000-க்கும் கீழே (வெறும் 29,864 ஆக) சரிந்தது.
குறைந்துவரும் இந்த பிறப்பு விகிதத்தை இப்போதே மீட்டெடுக்காவிட்டால் எதிர்காலத்தில் கடும் பொருளாதார, மனிதவளப் பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே, சிங்கப்பூர் அரசு கணித ஃபார்முலாவைக் கையில் எடுத்து இந்த 'ஃபர்ஸ்ட் டேட்' முன்னோடித் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

