- Home
- Business
- வெள்ளி விலை விழுந்தாச்சு.. 3 மாதத்தில் பாதி விலைக்கு போகப்போகுதா? நிபுணர்கள் கூறும் அட்வைஸ்
வெள்ளி விலை விழுந்தாச்சு.. 3 மாதத்தில் பாதி விலைக்கு போகப்போகுதா? நிபுணர்கள் கூறும் அட்வைஸ்
உலகளாவிய அரசியல் பதட்டங்களால் வெள்ளி விலை கடுமையாக சரிந்து வருகிறது. எம்சிஎக்ஸ் தரவுகளின்படி, கிலோவுக்கு சுமார் ரூ.19,000 குறைந்துள்ள நிலையில், நிபுணர்கள் இந்த சரிவு மேலும் தீவிரமடையக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

வெள்ளி விலை சரிவு
உலகளாவிய அரசியல் மாற்றங்கள் தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையேயான பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச பொருட்களின் விலைகள் திடீர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இதன் பிரதிபலிப்பாக, சமீபமாக வெள்ளியின் விலை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோர் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
எம்சிஎக்ஸ் விலை நிலவரம்
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்சிஎக்ஸ்) தரவுகளின்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் வெள்ளி விலை சுமார் ரூ.19,000 வரை குறைந்துள்ளது. வெள்ளி ஃபியூச்சர்ஸ் விலை ரூ.2,59,000 அளவிலிருந்து ரூ.2,46,000 சுற்று வரை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை குறைந்துள்ளது. ஸ்பாட் வெள்ளி விலை சுமார் 2.7 சதவீதம் சரிந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு $76 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளியில் முதலீடு
சந்தை நிபுணர்கள் சிலர், இந்த சரிவு இன்னும் தீவிரமடையக்கூடும் என எச்சரிக்கின்றனர். டிடி செக்யூரிட்டீஸின் மூத்த கமாடிட்டி ஆய்வாளர் ஒருவரின் கருத்துப்படி, வரும் மார்ச் மாதத்திற்குள் வெள்ளி ஃபியூச்சர்ஸ் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $78 அளவிலிருந்து $40 வரை குறைய வாய்ப்பு உள்ளது. இந்த கனிப்பின் படி, அடுத்த மூன்று மாதங்களில் வெள்ளியின் விலை கிட்டத்தட்ட பாதியாகக் குறையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளி விலை கணிப்பு
இதற்கு முன், கடந்த ஆண்டு வெள்ளி விலை அபூர்வமான உயர்வை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டில் மட்டும் வெள்ளியின் விலை சுமார் 170 சதவீதம் உயர்ந்தது. 2024 இறுதியில் ஒரு கிலோ வெள்ளி ரூ.86,000க்கு அருகில் இருந்த நிலையில், 2025 இறுதியில் அது ரூ.2.29 லட்சத்தை எட்டியது. தற்போது காணப்படும் சரிவு, அந்த வேகமான உயர்வுக்குப் பின்னைய இயல்பான திருத்தமாகவும் சந்தை வட்டாரங்கள் காணப்படுகின்றன. வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது மீண்டும் மாறுமா? அல்லது விலை ஏறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

