- Home
- Business
- Jewellery Box: நகை பாக்ஸுக்குள் இருக்கும் 'அந்த' சின்ன பேப்பர்.. பின்னணியில் இவ்வளவு பெரிய அறிவியல் ரகசியமா?
Jewellery Box: நகை பாக்ஸுக்குள் இருக்கும் 'அந்த' சின்ன பேப்பர்.. பின்னணியில் இவ்வளவு பெரிய அறிவியல் ரகசியமா?
Jewellery Box: தங்க நகை பாக்ஸுக்குள் இருக்கும் சின்ன பேப்பருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய அறிவியல் ரகசியம் இருக்கா? அது எதற்காக என்று தெரியுமா? வாங்க இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நகை பாக்ஸுக்குள் அந்த சின்ன பேப்பர் எதற்காக?
இந்தியாவில் தங்கம் என்பது ஒரு ஆபரணமாக மட்டுமில்லாது; ஒரு கெளரவமாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் தங்கம் விலை எவ்வளவு உச்சத்துக்கு சென்றாலும் நகைக்கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. நாம் அனைவரும் நமது குடும்ப விழாக்கள் மற்றும் விசேஷங்களுக்காக நகைக்கடைகளுக்குச் சென்று தங்கம், வெள்ளி அல்லது வைர நகைகளை ஆர்வத்துடன் வாங்கியிருப்போம்.
சிறிய கடை ஆனலும் சரி, பெரிய கடைகள் ஆனாலும் சரி நகைக்கடைக்காரர் அந்தப் பொன்னான நகையை ஒரு மெல்லிய காகிதத்திலோ அல்லது பிரத்யேக துணியிலோ மிக அழகாக மடித்து, ஒரு கண்கவர் பெட்டியில் வைத்துத் தருவார்.
இது பல ஆண்டுகள் தொடரும் வழக்கம். அந்த பெட்டியின் அழகிலும், புதிதாக வாங்கிய நகையின் பளபளப்பிலும் இருக்கும் நம்முடைய முழு கவனமும், அந்த எளிய பேப்பர் மீது ஒருபோதும் செல்வதில்லை. ஆனால், நாம் பெரிதும் கவனிக்காமல் கடந்து செல்லும் அந்தச் சிறிய பேப்பருக்குப் பின்னால் பெரிய பாதுகாப்பு மற்றும் அறிவியல் ரகசியங்கள் மறைந்துள்ளன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை.
பாதுகாப்புக் கவசம்
நகைப் பெட்டிகளுக்கு உள்ளே பேப்பர் அல்லது துணி வைப்பதற்குப் பின்னால் மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. முதன்மையாக, காற்றில் உள்ள ஈரப்பதம் (Moisture) மற்றும் ஆக்சிஜன் பட்டு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் தன் பொலிவை இழந்து மங்கிவிடாமல் அல்லது கருத்துப் போய்விடாமல் பாதுகாக்கவே இந்த முறை பல தலைமுறைகளாகத் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. குறிப்பாக வெள்ளிப் பொருட்கள் காற்றில் உள்ள தூசு மற்றும் ஈரப்பதத்தால் சீக்கிரமாகவே தன் நிறத்தை மாற்றி கருப்பாக மாறக்கூடும். அந்தத் தாக்கத்திலிருந்து நகையைக் காப்பாற்ற இந்த பேப்பர் ஒரு சிறந்த பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது.
நகைகள் நீண்ட காலம் ஜொலிக்க உதவுகிறது
இரண்டாவதாக, விலைமதிப்பற்ற வைர நகைகள், மாணிக்கங்கள், முத்துக்கள் மற்றும் நுண்ணிய கைவேலைப்பாடுகள் கொண்ட தங்க நகைகள் பெட்டியின் கடினமான சுவர்களில் அல்லது மற்ற நகைகளுடன் உரசி கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மென்மையான தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நகைகளின் தரம், அழகு மற்றும் பளபளப்பு குறையாமல் நீண்ட காலம் புதியது போலவே நீடிக்க இது பெரிதும் உதவுகிறது. சில சமூக வலைத்தளங்களில் வலம் வருவது போல இது தங்கத்தின் தரத்தைக் கண்டறியும் முறையல்ல என்றாலும், நகையின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பை உறுதி செய்யும் மிக அவசியமான முறையாகும்.
கடைகள் மாறினாலும் பாதுகாப்பு மாறவில்லை
தற்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான முன்னணி மற்றும் உள்ளூர் நகைக்கடைகளில், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தரும் விதமாக பிராண்டட் டிஷ்யூ பேப்பர்கள், வெல்வெட் லைனிங் அல்லது பிரத்யேக துணி உறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடையின் தரம் மற்றும் பிராண்டிங்குக்கு ஏற்ப இந்த முறைகள் மாறினாலும், நகையைப் பாதுகாக்கும் அடிப்படை நோக்கம் எப்போதுமே மாறுவதில்லை. எனவே, அடுத்த முறை நீங்கள் நகைக்கடைக்குப் போய் நகை வாங்கித் திறக்கும்போது, அந்தப் பெட்டிக்குள் இருக்கும் காகிதத்திற்குப் பின்னால் இருக்கும் இந்தச் சின்னப் பாதுகாப்பு ரகசியத்தை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

