வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இனி உடனே பணம்! ஆர்பிஐ அறிவிப்பு
இந்த முறையில், முதல் கட்டமாக அக்டோபர் 4, 2025 முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செலுத்திய காசோலை அதே நாளிலேயே செயலாக்கப்படும். இரண்டாம் கட்டமாக ஜனவரி 3, 2026 முதல் காசோலை 3 மணி நேரத்திற்குள் செயலாக்கப்படும்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சேமிப்பு கணக்கில் காசோலை (Cheque) செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, இனி 2 முதல் 3 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 4, 2025 முதல் காசோலை செலுத்தினால் அதே நாளிலேயே பணம் கணக்கில் வந்து சேரும்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இந்த முறையை Continuous Clearing and Settlement on Realization என்று பெயரிட்டுள்ளது. வாடிக்கையாளர் காசோலை வங்கியில் செலுத்தியவுடன், அது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு கிளியரிங் ஹவுஸ் (Clearing House) நோக்கி அனுப்பப்படும். அங்கு நேரடியாக செயலாக்கம் நடைபெறும், மேலும் காசோலை எந்த வங்கியைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்தவுடன் அந்த வங்கி உடனடியாக சரிபார்க்க வேண்டும்.
இரண்டு கட்டங்கள்
இந்த முறை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். முதல் கட்டம் – அக்டோபர் 4, 2025 முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செலுத்திய காசோலை அதே நாளிலேயே செயலாக்கப்படும். மாலை 7 மணிக்குள் வங்கி பதில் அளிக்காவிட்டால், காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இரண்டாம் கட்டம் – ஜனவரி 3, 2026 முதல் காசோலை 3 மணி நேரத்திற்குள் செயலாக்கப்பட வேண்டும், மேலும் அதில் பணம் வாடிக்கையாளர் கணக்கில் 1 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.
காசோலை
இந்த மாற்றம் பொதுமக்களுக்கு மிகப் பெரிய சலுகை. இனி காசோலை வைப்பு செய்த பிறகு பல நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக தினசரி பணப்புழக்கம் (cash flow) தேவையான வியாபாரிகள் மற்றும் சிறு தொழிலாளர்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும்.
செட்டில்மென்ட்
வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் வங்கிகளுக்கும் இது நன்மை பயக்கும். நேரடி கிளியரன்ஸ் மூலம் வங்கிகளின் செட்டில்மென்ட் அபாயம் குறையும். இதனால் முழு வங்கி அமைப்பும் வேகமாகவும் சீராகவும் இயங்கும்.