- Home
- Business
- தங்கம் விலை 30% சரிவு... அடகு வைத்த நகைக்கு ஆபத்து: கடன் வாங்கியவர்களின் கழுத்தை நெறிக்கும் நிதி நிறுவனங்கள்!
தங்கம் விலை 30% சரிவு... அடகு வைத்த நகைக்கு ஆபத்து: கடன் வாங்கியவர்களின் கழுத்தை நெறிக்கும் நிதி நிறுவனங்கள்!
கடந்த ஜனவரி மாத உச்சத்திலிருந்து தங்கம் விலை 30 சதவீதம் சரிந்துள்ளதால், அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் பிணைய மதிப்பு குறைந்து கடன் வாங்கியவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை 30% சரிவால் அதிகரிக்கும் அபாயம்
சாமானிய மக்கள் முதல் சிறு வணிகர்கள் வரை அவசரத் தேவைக்கு உடனடியாக நாடுவது தங்க நகைக் கடனைத்தான். ஆனால், கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் கடும் சரிவு, இப்போது நகைக் கடன் வாங்கியவர்களுக்கும் கடன் கொடுத்த நிதி நிறுவனங்களுக்கும் புதிய தலைவலி உருவாக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாத உச்சத்திலிருந்து தங்கம் விலை சுமார் 30% வரை சரிந்துள்ள நிலையில், நாட்டின் 247 பில்லியன் டாலர் (சுமார் ரூ.23 லட்சம் கோடி) மதிப்பிலான தங்கக் கடன் துறை மீதான கண்காணிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிரப்படுத்தியுள்ளது.
நகைக் கடன் வாங்கியவர்களுக்கு என்ன சிக்கல்?
பொதுவாக, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) நாம் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 85 % வரை கடன் வழங்குகின்றன. தங்கம் விலை உச்சத்தில் இருந்தபோது அதிகத் தொகையைக் கடனாக வாங்கியவர்களுக்கு, இப்போது தங்கம் விலை 30 % குறைந்திருப்பதால் பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, நீங்க வாங்கிய கடன் தொகையை விட, நீங்கள் அடகு வைத்த தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பு குறைவாக மாறத் தொடங்கியுள்ளது. இதனால், பிணைய மதிப்பைச் (Collateral value) சமன் செய்ய, கூடுதல் நகைகளை அடகு வைக்க வேண்டும் அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியை உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வலியுறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கியது ஏன்?
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கடுமையான வட்டி விகித நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகளால் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், நகைக் கடன் பிரிவில் கடன் தவணை தவறும் (Delinquencies) போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களில் அழுத்தம்: இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸில் (Bajaj Finance), திருப்பிச் செலுத்துவதில் நெருக்கடியைச் சந்திக்கும் தங்கக் கடன்களின் பங்கு 1.87 சதவீதத்திலிருந்து 2.02 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் (IIFL Finance) நிறுவனத்தின் தங்கக் கடன் பிரிவில் வாராக் கடன் அளவு 0.6 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. வட்டியைத் தள்ளிவைத்துத் திருப்பிச் செலுத்தும் பழைய நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதும், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை அதிகாரிகள் நகைக் கடன் நிறுவனங்களின் சொத்துத் தரம் மற்றும் 85 சதவீத கடன் வரம்பு மீறப்படுகிறதா என்பது குறித்துத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த சில மாதங்கள் எப்படி இருக்கும்?
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தங்கக் கடன் சந்தை 5 மடங்கு வளர்ந்து ரூ.23 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது; இதில் 60 % இன்னும் முறைசாரா துறையிலேயே உள்ளது. இருப்பினும், இந்தியாவின் மொத்த வங்கிக் கடனில் இத்துறை 2.5 சதவீதப் பங்கை மட்டுமே கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த வங்கித் துறைக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பது ஆறுதலான விஷயம்.
ஆனாலும், தங்கக் கடன் பிரிவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அடுத்த சில காலாண்டுகளுக்குத் தொடரும் என நிதித் துறை வல்லுநர்கள் கணிக்கின்றனர். எனவே, ஏற்கனவே நகைக் கடன் வைத்திருப்பவர்கள் தங்கள் கடனுக்கான வட்டியைச் சரியான நேரத்தில் செலுத்துவதும், கூடுதல் பிணையம் கேட்கப்பட்டால் அதற்குத் தயாராக இருப்பதும் அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

