உஷார்.! ஏடிஎம் கட்டணங்கள் மாற்றம்.. ரிசர்வ் வங்கி புது ரூல்ஸ்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் இலவச பரிவர்த்தனை வரம்புகளை மாற்றியுள்ளது. இதுதொடர்பான முழு விபரங்களை இங்கு காணலாம்.

புதிய ஏடிஎம் கட்டணங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் விதிகளில் சில புதிய மாற்றங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை, பணம் வைப்பு/பணம் எடுக்கும் விதிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் அடங்கும். இதனால், வாடிக்கையாளர்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை திட்டமிட்டு செலுத்தலாம். இந்த விதிகள் பஞ்சாப் நேஷனல் பேங்க், ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ போன்ற முக்கிய வங்கிகளுக்கு பொருந்தும்.
மெட்ரோ நகரங்களில் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை
மெட்ரோ நகரங்களில் வாடிக்கையாளர்கள் மூன்று இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் பெறுவர். இதில் பணம் எடுக்கும் மற்றும் கணக்கு நிலை சரிபார்ப்பது இரண்டும் அடங்கும். பரிவர்த்தனை வரம்பை மீறினால் வங்கிகள் கட்டணம் வசூலிக்கும். உதாரணமாக: பஞ்சாப் நேஷனல் பேங்க் - ரூ.23 (நிதி பரிவர்த்தனை), ரூ.11 (கணக்கு நிலை சரிபார்ப்பு), ஹெச்டிஎப்சி - ரூ.23 நிதி பரிவர்த்தனைகளுக்கு, எஸ்பிஐ - பழைய கட்டண விதிகள் தொடரும்.
மெட்ரோ அல்லாத நகரங்களில் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை
மெட்ரோ அல்லாத பகுதிகளில் வாடிக்கையாளர்கள் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் பெறுவர். அதற்குப் பிறகு, பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களிடம் அதிகபட்சம் ரூ.23 + GST கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த கட்டண சேவைகளுக்கு (உதாரணமாக, கணக்கு நிலை சரிபார்ப்பு) சில வங்கிகள் ரூ.11 வசூலிக்கின்றன.
பண வைப்பு மற்றும் பணம் எடுப்பு விதிகள்
ஏடிஎம் மூலம் பணம் வைப்பு செய்வதில் பொதுவாக கட்டணம் வராது. ஆனால் வரம்புக்கு மேல் பணம் எடுத்தால் வங்கிகள் தனிப்பட்ட கட்டணத்தை விதிக்கும். ஆண்டுக்கு ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு பான் மற்றும் ஆதார் வழங்குவது கட்டாயம். இது கருப்பு பணம் உருவாவதை தடுக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுகிறது.
கூடுதல் கட்டணங்களைத் தவிர்ப்பது எப்படி?
உங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்-ஐ பயன்படுத்துங்கள். கணக்கு நிலை சரிபார்ப்பு மற்றும் நிலவர அறிக்கைக்காக நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் பயன்படுத்தவும். மாதம் தோறும் ஏடிஎம் பரிவர்த்தனையை கண்காணிப்பது மிகவும் அவசியம் ஆகும்.