- Home
- Business
- PM Kisan: அப்பா பெயரிலும், மகன் பெயரிலும் நிலம் இருக்கா? ரூ.2,000 யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
PM Kisan: அப்பா பெயரிலும், மகன் பெயரிலும் நிலம் இருக்கா? ரூ.2,000 யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
PM Kisan Samman Nidhi: பிஎம் கிசான் திட்டத்தில் ஒரே வீட்டில் விவசாயிகளாக இருக்கும் அப்பா, மகன் இருவருக்கும் தலா 2,000 ரூபாய் கிடைக்குமா? ரூல்ஸ் என்ன சொல்கிறது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PM Kisan Samman Nidhi
விவசாயிகளின் பொருளாதார உதவிக்காக மத்திய அரசு 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' (PM-Kisan) திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த பணம் தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் நேரடியாக (DBT) செலுத்தப்படுகிறது. சரி, இந்த திட்டத்தில் அப்பாவும் மகனும் விவசாயிகளாக இருந்து ஒரே நேரத்தில் பணம் வாங்க முடியுமா? இதைப் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
3வது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
இந்த ஆண்டில் ஏற்கனவே இரண்டு தவணைப் பணத்தை விவசாயிகள் வாங்கிவிட்டார்கள். இப்போது மூன்றாவது தவணைக்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நேரத்தில் நிறைய விவசாய குடும்பங்களுக்கு ஒரு பெரிய சந்தேகம் உள்ளது. அதாவது, ஒரே வீட்டில் அப்பாவும் மகனும் விவசாயம் செய்தால், ரெண்டு பேருக்கும் தனித்தனியாக 2,000 ரூபாய் கிடைக்குமா? ரெண்டு பேரும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியுமா? இதுபற்றி மத்திய அரசின் விதிகள் என்ன சொல்கிறது? என பார்ப்போம்.
அப்பா, மகன் இருவருக்கும் பணம் கிடைக்குமா?
மத்திய அரசின் பிஎம் கிசான் விதிகளின்படி, அப்பாவும் மகனும் ஒரே 'விவசாய குடும்பமாக' இருந்தால், இரன்டு பேருக்கும் தனித்தனியாக பணம் கிடைக்காது. இந்த திட்டத்தில் ஒரு தனி நபரை கணக்கில் எடுக்க மாட்டார்கள், 'குடும்பத்தை' தான் ஒரு யூனிட்டாக பார்ப்பார்கள். கணவன், மனைவி மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அடங்கியது தான் ஒரு குடும்பம். நிலம் யார் பெயரில் இருந்தாலும், அந்த குடும்பம் தகுதியுடையதாக இருந்தால் ஆண்டுக்கு 6,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். அதாவது, ஒரே ரேஷன் கார்டில் பெயர் இருந்து, ஒரே வீட்டில் வசித்தால் அப்பாவுக்கு மட்டுமே இந்த பணம் கிடைக்கும், மகனுக்கு கிடைக்காது.
மகன் மேஜர் ஆகிவிட்டால் விதிகள் மாறுமா?
விவசாயிகள் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். பிஎம் கிசான் திட்டத்தின் 'குடும்பம்' என்ற வரையறைக்குள் மைனர் குழந்தைகள் மட்டுமே வருவார்கள். அதனால், 18 வயசுக்கு மேற்பட்ட மகனுக்கு விதிகள் கொஞ்சம் மாறும்.
1. தனி நில ஆவணம் கட்டாயம்: மகன் விவசாயம் செய்கிறார் அல்லது அவருக்கு 18 வயசு ஆகிவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக பணம் கிடைக்காது.
2. தனி ரேஷன் கார்டு மற்றும் பட்டா: மகனுக்கு என்று தனியாக ஒரு ரேஷன் கார்டு இருக்க வேண்டும். அதேபோல, வருவாய்த்துறை ஆவணங்களில் (பட்டா/சிட்டா/அடங்கல்) அவர் பெயரில் விவசாய நிலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
3. தனி விவசாய குடும்பம்: மகன் தனியாக விவசாய நிலம் வைத்துக்கொண்டு, தனி விவசாய குடும்பமாக இருந்தால் மட்டுமே அவருடைய தகுதி தனியாக சரிபார்க்கப்படும்.
சுருக்கமாக சொல்லப்போனால், அப்பாவின் பெயரில் தனி நிலம், மகனின் பெயரில் தனி நிலம் இருந்து, இரண்டு பேருக்கும் தனித்தனி ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அப்பாவும் மகனும் தலா 2,000 ரூபாய் வாங்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
தவறாக பணம் வாங்கினால் நோட்டீஸ் வரும்
ஒரே குடும்பத்தில் இருந்துகொண்டு, விதிகளை மீறி அப்பாவும் மகனும் பிஎம் கிசான் பணத்தை வாங்கினால், அவர்களை அரசு தகுதியற்றவர்களாக அறிவிக்கும். இ-கேஒய்சி (e-KYC), ஆதார் இணைப்பு மற்றும் நில ஆவணங்கள் சரிபார்ப்பு (Land Seeding) மூலமாக இப்படிப்பட்ட மோசடிகளை அரசு கண்டுபிடித்து வருகிறது. விதிகளுக்கு முரணாக பணம் வாங்கியது தெரிந்தால், இதுவரை வாங்கிய மொத்த பணத்தையும் அரசுக்கே திருப்பி கட்ட வேண்டி வரும். ஆகையால் விவசாயிகள் எந்த குழப்பமும் இல்லாமல், தங்களின் நில ஆவணங்கள் மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை சரியாக செக் செய்துவிட்டு இந்த திட்டத்தில் பயன்பெறுவது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

