Onion Price: விண்ணை தாண்டிய வெங்காய விலை?! ஒரே நாளில் உச்சம் தொட இதுதான் காரணம்.!
அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் வரத்து குறைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழக சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.

இனி ஒரு வாரத்திற்கு ஒரு வெங்காயம்தான்
மகாராஷ்டிராவில் தொடரும் கனமழையால் வெங்காய வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் தாக்கம் மதுரை மட்டுமல்லாமல் சென்னையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், மொத்த விலையுடன் சில்லறை விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் சென்னை நகரின் பல பகுதிகளில் வெங்காயம் கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகி வருகிறது. வரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை விலை உயர்வு நீடிக்கக்கூடும் என வியாபாரிகள் கணித்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் வெங்காயத்தின் அளவைப் பொறுத்தே அடுத்த சில நாட்களில் விலை நிலவரம் அமையும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதுரையிலும் உச்சம் தொட்ட வெங்காயம் விலை
மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடகாவின் பல்லாரி மற்றும் மகாராஷ்டிராவின் நாசிக் பகுதிகளில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் அறுவடை, போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எல்லா ஊர்லேயும் இதே நிலைதான்
மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு தினமும் தமிழகத்தின் பல மாவட்டங்களுடன், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்தும் ஆயிரக்கணக்கான டன் காய்கறிகள் வரத்து ஆகின்றன. ஆனால் கடந்த ஒரு வாரமாக வெங்காய லாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக மொத்த விலையிலும் சில்லறை விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி சந்தை தென் தமிழகத்தின் முக்கிய காய்கறி மொத்த சந்தைகளில் ஒன்றாகும்.
இன்றைய விலை நிலவரம்
தற்போது தரத்தைப் பொறுத்து பல்லாரி வெங்காயம் கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.55 வரை மொத்த சந்தையில் விற்பனையாகிறது. சில்லறை சந்தைகளில் இதே வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சிறிய அளவிலான வெங்காயங்களுக்கு சற்று குறைந்த விலை இருந்தாலும், தரமான பெரிய வெங்காயத்திற்கு அதிக தேவை நிலவுகிறது.
வியாபாரிகளின் தகவலின்படி, மகாராஷ்டிராவில் மழை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களிலும் வரத்து குறைய வாய்ப்புள்ளது. புதிய அறுவடை சந்தைக்கு வர தாமதமானால் விலை மேலும் உயரக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில் வானிலை சீராகி, லாரி போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கினால் விலையும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் செலவு
வெங்காய விலை உயர்வு பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் தொழிலையும் பாதித்துள்ளது. தினசரி அதிக அளவில் வெங்காயம் பயன்படுத்தும் சிறு வணிகர்கள் கூடுதல் செலவை சமாளிக்க சிரமப்படுவதாக கூறுகின்றனர். சில இடங்களில் உணவுப் பொருட்களின் விலையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
வாங்கி ஸ்டாக் வைக்க வேண்டாம்
விவசாய சந்தை நிபுணர்கள் கூறுவதாவது, வெங்காயத்தின் விலை என்பது உற்பத்தி, மழை, சேமிப்பு வசதிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ஆகியவற்றைப் பொறுத்தே அதிகம் மாறுபடும். எனவே அடுத்த வாரங்களில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நிலவும் வானிலை சூழலே வெங்காய விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். தற்போது தேவைக்கேற்ப மட்டுமே வாங்குவது நுகர்வோருக்கு சற்று சிக்கனமாக இருக்கும் என வியாபாரிகள் ஆலோசனை வழங்குகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

